பாட்னா;
பீகார் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்களில் 22 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களில் 9 பேர் மிகவும் மோசமான கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்,–தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. நிதிஷ்குமார் முதல்வராகவும், தேஜஸ்வி துணை முதல்வராகவும் இருந்து வந்தனர்.

இந்நிலையில், ரயில்வேக்கு சொந்தமான ஹோட்டல்களை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேஜஸ்வியின் பெயரும் இணைக்கப்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார், பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்து, புதிய அமைச்சரவையை ஏற்படுத்தினார்.

ஆனால், நிதிஷ் குமாரின் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 அமைச்சர்களில் 22 பேர் ஊழல் உட்பட மோசமான கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ( ஏடிஆர்) வெளியிட்டு உள்ள அறிக்கை, ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 76 சதவிதம் அமைச்சர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.

இவர்களில் 9 பேர் மிகவும் தீவிரமான கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொள்வதாகவும், நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை எதிர்க்கொள்கிறார்கள்; பிற அமைச்சர்கள் திருட்டு, மோசடி மற்றும் ரவுடியிசம் என பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் அம்பலப்படுத்தியுள்ளது.

லாலுவையும், தேஜஸ்வியையும் ஊழல் வாதிகள் என்று கூறிவிட்டு, பாஜகவுடன் கைகோர்த்து புதிய ஆட்சியமைத்துள்ள நிதிஷ்குமார், தற்போதைய தனது அமைச்சரவையில் 76 சதவிகிதம் ஊழல் கிரிமினல் பேர்வழிகள் இடம்பெற்றிருப்பது என்ன பதிலை சொல்லப் போகிறார்? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: