===எஸ்.ஏ.பி.===
ஹிட்லர் கொக்கரித்தான். ஜெர்மானியின் இளைஞர்களே! யூரல் மலைப் பிரதேசத்தின் கனிம வளமும், காகஸஸின் எண்ணெய் வளமும், உக்ரேனின் கோதுமை வயல்களும், ஜார்ஜியாவின் கனிகுலுங்கும் தோட்டங்களும், சைபீரியாவின் வனச்செல்வங்களும் மட்டும் எண் கையிலே கிடைக்குமானால் நான் ஜெர்மனியைப் பூவுலகின் சொர்க்கமாக்கிவிடுவேன்.ஜெர்மானிய இளைஞர்களே முன்னேறுங்கள். மாஸ்கோவைக் கைப்பற்றுவோம். கம்யூனிஸ்டுகளையும் அவர்களது ஆட்சியையும் கருவறுத்துக் கல்லறை எழுப்புவோம் என்று பாசிசவெறியன் ஹிட்லர் கொக்கரித்து சோவியத் யூனியன் மீது தனது வெறித்தாக்குதலைத் தொடுத்தான்.

மாமேதை ஸ்டாலின் தலைமையில் இருபது கோடி மக்களும் தங்கள் தாயகத்தைக் காப்பதற்கான போரில் இறங்கினர். சின்னச் சிறுவர் முதல் முதியவர்கள் வரை போர்க்களத்தில் ஆயுதமேந்தினர். இரண்டு கோடி மக்கள் அந்த பயங்கரப் போர்களில் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.அந்த எண்ணற்ற தியாகிகளில் பல குறிப்பிடத்தக்க வீரர்கள் உண்டு. தாயகத்தைக் காக்கும் போரில் ஆண், பெண் என்ற பேதமின்றி பங்கேற்றனர். தங்களைத்தியாக வேட்கையில் அர்ப்பணித்து வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றனர். இறுதியில் ஹிட்லரை வீழ்த்தி தங்கள் தாயகத்தை மீட்டனர். அவர்கள் சோவியத் மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசங்களின் மக்களுக்கும் நிரந்தர ஆதர்ச ஒளியாய் திகழ்கிறார்கள்.
அந்தத் தியாக தீபங்களில் ஒருத்தி தான் வீரமங்கை தான்யா.

1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் துவக்கத்தில் இது நடந்தது. மாஸ்கோவுக்கருகில் பெர்டிஸ்சேவா என்ற குக்கிராமம் உள்ளது. அங்கு தான்யா என்ற பெயருள்ள பதினெட்டு வயதே நிரம்பிய பெண் ஜெர்மனி ராணுவத்தால் தூக்கிலிடப்பட்டாள். இவள் சோசலிஸ்ட் இளைஞர் லீக் (கம்ஸமோல்) அமைப்பைச் சேர்ந்தவள். கடுமையான, பயங்கரமான அந்தப் போர் நாட்களில் தலைநகரான மாஸ்கோ படுகுழிகள் நிறைந்த கல்லறையாக எப்பொழுதும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மாஸ்கோ நகருக்கருகில் கொலிஸ்ட் யாரோ, கொண்டயா ஆகிய இடங்களில் ஜெர்மானியருடன் போர் நடைபெற்றது. அந்த இடங்கள் மாஸ்கோ நகர மக்களின் கோடை வாசஸ்தலங்களாகும்.

நாஜிகளை எதிர்த்து செஞ்சேனை கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தது. செஞ்சேனை வீரர்களுக்கு உதவியாக மாஸ்கோவின் துணிச்சல் மிக்க இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். ஒரு பக்கமாகப் போரிடும் அமைப்பில் எதிரிப்படையின் பின்பக்கமிருந்து தாக்குதல் நடத்தும் முதல் வரிசையில் இருப்பவர்களின் உதவிக்காக இந்த இளைஞர் படை அனுப்பப்பட்டது.மிகவும் குறுகிய அவகாசத்தில் ஜெர்மனி முகாமைச் சுற்றிலுமிருந்த எல்லா இணைப்புகளையும் இளைஞர் படையினர் துண்டித்து விட்டனர். இதனால் எதிரி முகாம்கள் தீப்பற்றி எரிந்தன. ஜெர்மன் படைப்பிரிவின் பதினேழு குதிரைகள் இதில் அழிந்தன. எதிரிப்படைகள் மறுநாள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து கிராமத்து விவசாயிகள் கூறிய விஷயம் இது தான்:
ஒரு இளைஞன் மென்மயிர்தோல் தொப்பியணிந்து, கோடுபோட்ட கம்பளிச் சட்டையும், மெத்தென்ற துணியில் தைத்த முழுக்கால் சட்டை பெல்ட், பூட்சுடன் தோளிலே ஒரு பையைச் சுமந்து கொண்டு இங்கு வந்தான். துப்பாக்கியை தனது கோட்டுக்குள் மறைத்துக் கொண்டு ராணுவ மிடுக்கோடு இருந்தான்.

பையிலிருந்து ஒரு பாட்டிலை வெளியே எடுத்து கிணற்று ஊற்றுநீர் போலிருந்த ஒரு திரவத்தை ஜெர்மனி கூடாரத்தின் மீது ஊற்றித் தீக்குச்சியை உரசிப் போட்டான். அப்போது ஜெர்மானியக் காவல்தலைவன் திடீரெனப் பாய்ந்து அவனைப் பின்புறமிருந்து தாக்கிப் பிடித்துக் கொண்டான்.பிடிபட்ட நம் இளைஞன் சமாளித்துத் திமிரி ஜெர்மானியனைக் கீழே தள்ளிவிட்டு தனது ரிவால்வரை உருவி எடுத்தான். ஆனால், ஜெர்மானியன் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த இளைஞனின் ரிவால்வரைப் பறித்துக் கொண்டு கைகளைக் கட்டிவிட்டு மற்றவர்களைச் சத்தம் போட்டு அழைத்தான்.

ஜெர்மானியரிடம் பிடிபட்டது ஒரு ஆணல்ல, ஒரு சின்னப் பெண் தான் என்று உடனே தெரிந்து விட்டது. நல்ல உயரமான, மெலிந்த, இளமையான அழகிய பெண் அவள். பெரிய கருவிழிகளுடன் தனது கருங்கூந்தலை குட்டையாய் கத்தரித்து ஆணைப் போலத் தோற்றமளித்தாள். அவளை ஜெர்மானியர்கள் ஒரு வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர், விசாரணை துவங்கியது.

ஜெர்மானியர்கள் அந்த வீட்டின் சொந்தக்காரர்களை சமையல் கட்டுக்குள் ஓடிவிடும் படி கட்டளையிட்டனர். ஏனெனில் அந்தச் சின்னப் பெண் கொஞ்சங்கூட பயமில்லாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வேகமாகத் தயக்கமின்றி பதிலளித்தாள்.

” நான் உங்களிடம் கூறமாட்டேன் – தெரியாது – இல்லை- எனக்குத் தெரியாது- ” என்பதைத் தவிர அவளிடமிருந்து ஒரு வார்த்தையைக் கூடக் கறக்க முடியவில்லை. எரிச்சல் அடைந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் பெல்ட் வார்களால் முரட்டுத்தனமாக அடித்து மீண்டும் மீண்டும் கேள்விகளால் அவளைத்துளைத் தெடுத்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு இளம் அதிகாரி மிகுந்த குடிபோதையுடன் கண்களை இறுக மூடியபடி, காதுக்கு மேலே கைகளைத் தூக்கியவாறு அவளிடம் சென்று விசாரித்தான். அவளிடமிருந்து “தெரியாது, நான் பேசமாட்டேன்” என்ற பதில் தான் வந்தது. இதை அவள் நிதானமாக, வேண்டுமென்றே பேசுகிறவள் போல் மெல்லியக் குரலில் அலட்சியமாய் கூறினாள். விசாரணை முடிந்ததும் அவள் வெறும் கமிசும், அரைக்கால் சட்டையும் மட்டுமே அணிந்து வெறுங்காலுடன் பனியில் வெளியே போய் விட்டு வந்தாள்.அவள் வீட்டுக்குள் வந்து ஒரு இருக்கையில் அமர்ந்ததும், வீட்டுக்காரன் குளிக்கும் அவனது மனைவியும் அவளருகில் வந்து விளக்கு வெளிச்சத்தில் அவளைக் கூர்ந்து கவனித்தனர்.
அவளது நெற்றியில் அடித்துக் காயப்படுத்தியிருந்தனர். அவளது கை, கால்கள் ஒரே சேறாய் இருந்தது. அவளது கைகள் இரண்டையும் பின்புறம் இறுகக் கட்டியிருந்தனர். உதடு கிழிந்து ரத்தம் வழியும் படி அவளை அடிந்திருந்தனர். அவள் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். உள்ளே வந்த ஒரு சிப்பாய் அவளைப் பிடித்து கதவருகே தள்ளி விட்டான்.

Leave a Reply

You must be logged in to post a comment.