பெங்களூரு;
குஜராத்தில் பாஜக நடத்திய குதிரை பேரத்திலிருந்து தப்பித்து, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 44 பேர் பெங்களூருவுக்கு வந்து தங்கியிருந்த நிலையில், இங்கு எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டுக்கு வருமான வரித்துறையை அனுப்பி பாஜக சோதனை நடத்தியுள்ளது.

அத்துடன் கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், அவரது சகோதரரும் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என கர்நாடகம் மற்றும் தில்லியில் இவர்களுக்குச் சொந்தமாக உள்ள 39 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரூ. 7 கோடியே 50 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்
இது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. “முழுக்க முழுக்க பாஜக-வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
“குஜராத்தில் இருந்து ஒரு மாநிலங்களவைப் பதவியைப் பிடிக்க பாஜக மேற்கொண்ட இழிவான யுக்தி இது” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சாடியுள்ளார்.“ஒற்றை எம்.பி. சீட்டுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக, பழிவாங்கும் நோக்கில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், குஜராத் மாநிலங்களவை பதவிக்கு நிறுத்தப்பட்டிருப்பவருமான அகமது பட்டேல் கூறியுள்ளார்.

நம்பிக்கை இழந்த பாஜக
“குஜராத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக-வினர் வெற்றி பெற அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றனர்; அவர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அமைப்புகளையும் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்; பாஜக-வினரின் இந்த செயல் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதையே காட்டுகிறது” என்றும் அகமது பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே-வும், கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்தச் சோதனையை “அரசியல் பழிவாங்கும் செயல்” என்று கண்டித்துள்ளார்.

வருமான வரித்துறை விளக்கம்
ஆனால், ஏற்கெனவே இருக்கும் வரி ஏய்ப்பு புகாரின் தொடர்ச்சியாகவே அமைச்சர் டி.கே. சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. சுரேஷ் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும், ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.“வருமான வரித்துறை சட்டப் பிரிவு 132-ன் படி, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது; சோதனைக்கான நேரம் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது; அமைச்சர் சிவகுமார் அவருக்குச் சொந்தமான ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்கியிருக்கக் கூடும் என்ற அடிப்படையிலேயே அங்கு சோதனை நடத்தப்பட்டது; குறிப்பாக அமைச்சரின் அறையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது; எம்எல்ஏ-க்கள் இருந்த அறைகளை சோதனையிடவில்லை” என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மோடி, அமித் ஷாவே காரணம்

வருமான வரித்துறை கூறியிருப்பதை அமைச்சர் டி.கே. சிவகுமாரின் தம்பியும் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் மறுத்துள்ளார்.

“எங்களுடைய அனைத்துத் தொழில்களும் சட்டத்துக்கு உட்பட்டே நடைபெற்று வருவதால், நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை” என்று கூறியுள்ள அவர், அடிப்படையில் “பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், அரசியல் காய் நகர்த்தல்களை எங்களை நோக்கித் திருப்பி இருக்கின்றனர்” என்பதே உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தல்
குஜராத்தில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றில் 2 இடங்களில் பாஜக-வும், ஓரிடத்தில் காங்கிரசும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதனடிப்படையில், காங்கிரஸ் தனக்கு வாய்ப்புள்ள ஓரிடத்திற்கு, சோனியா காந்தியின் ஆலோசகரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அகமது பட்டேலை வேட்பாளராக நிறுத்தியது.

காங்கிரசை உடைத்த பாஜக
பாஜகவோ, தனக்கு வாய்ப்பில்லாத இடத்திற்கும் சேர்த்து 3 வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வந்த் சிங் ராஜ்புத் என்பவரையும் தன்பக்கம் இழுத்து வேட்பாளராக அறிவித்தது. அவரை வெற்றிபெறச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையிலும் இறங்கியது. காங்கிரசிலிருந்து விலகி பாஜகவுக்கு வந்தால் ரூ. 15 கோடி வரை வழங்கப்படும் என்று ஆசை காட்டியது.இதனால் ஒரே வாரத்தில் பல்வந்த் சிங் ராஜ்புத், தேஜாஸ்ரீ படேல், பி.ஐ. படேல், மன்சிங் சவுகான், சனாபாய் சவுத்ரி, ராம்சிங் பார்மர் ஆகிய 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு தாவினர்.

57 எம்எல்ஏ-க்களைப் பெற்றிருந்த காங்கிரசின் பலம் 51 ஆனது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் வெற்றிபெற 44 எம்எல்ஏ-க்கள் தேவை என்ற நிலையில், பாஜகவின் இழுப்பு வேலை காங்கிரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள்

எஞ்சியிருக்கும் எம்எல்ஏ-க்களையாவது பாதுகாக்க வேண்டும் என்று முடிவுசெய்த காங்கிரஸ் கடந்த ஜூலை 28-ஆம் தேதி இரவு இரவோடு இரவாக தனது எம்எல்ஏ-க்களை கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டுவந்தது. பெங்களூரு புறநகர்ப்பகுதியான பிலாடியில், கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமாருக்குச் சொந்தமான ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பிறர் தொடர்பு கொள்ளமுடியாத வகையில், அமைச்சர் டி.கே. சிவகுமாரும், அவரது தம்பி டி.கே. சுரேஷ் எம்.பி.யும் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

மத்திய போலீஸ் பாதுகாப்பு
இதனால் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பாஜக, வருமான வரித்துறையை ஏவி விட்டது. அவர்கள், புதனன்று காலை 7 மணிக்கு, மத்திய அதிரடிப்படை போலீசாரின் பாதுகாப்புடன், எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட் மற்றும் அமைச்சர் டி.கே. சிவகுமார், டி.கே. சுரேஷ் எம்.பி. ஆகியோருக்கு கனகபுரா, சதாசிவ நகர் பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் என 39 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் அமளி; நாள் முழுவதும் ஒத்திவைப்பு
வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பணப்பட்டு வாடா மூலம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “கர்நாடக அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை; ரிசார்ட்டில் எந்த ஒரு எம்எல்ஏ-விடமும் சோதனை நடைபெறவில்லை; அமைச்சரிடம் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது” என்றார்.ஆனால், இதனை ஏற்க மறுத்துவிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநிலங்களவைத் துணைத்தலைவர் பி.ஜே. குரியனின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சித்தராமையா கண்டனம்
அமைச்சர் டி.கே. சிவகுமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக-வின் இதுபோன்ற மிரட்டல்களுக்கு காங்கிரஸ் அடிபணியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.