புதுதில்லி;
தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையா? என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

‘ஆதார்’ அட்டை தனிநபர் அந்தரங்க உரிமையை பறிப்பதாக எழுந்த புகாரையடுத்து, தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையா? என்பதை முடிவு செய்ய, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில், உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துவதை தடைசெய்துள்ளது. இவ்வாறான பகிரப்படுத்துதல் தனிநபர் உரிமை மீறலாகும் எனவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ஆனால், தனிநபர் அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல என்று 1954-ஆம் ஆண்டு 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வும், அடிப்படை உரிமைதான் என்று 1962-ஆம் ஆண்டு 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வும் தீர்ப்புக்களை வழங்கியிருந்தன.
அதனடிப்படையில், மத்திய அரசின் ஆதார் திட்டம் தனிமனித அந்தரங்க உரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும், ஆதார் அட்டை திட்டமும், அதை பெறுவதற்கு கையாளப்படும் முறைகளும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதில், 8 நீதிபதிகளின் தீர்ப்பை எடுத்துக் கொள்வதா, அல்லது 6 நீதிபதிகளின் தீர்ப்பை முன்னுதாரணமாக கொள்வதா? என்ற சிக்கல் எழுந்ததால், உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தியது. இந்த அமர்வு ஜூலை 18-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதன்கிழமையன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: