திருப்பூர், ஆக.1 –
திருப்பூர் மாநகராட்சியில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வரும் 43 வாகன ஓட்டுநர்களை தனியார் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திங்களன்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 43 ஓட்டுநர்கள் மாநகராட்சியின் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். பிற்காலத்தில் மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களாக மாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஏழாண்டு காலமாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வந்தனர். ஆனால் திடீரென மாநகராட்சி நிர்வாகம் அந்த 43 தொழிலாளர்களையும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் வேலை செய்யக்கூடியவர்களாக வகைமாற்றம் செய்யும் காரியத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களாக மாற முடியும் என்ற நம்பிக்கையை நிர்வாகம் தகர்த்துவிட்டது.

இதனால் அந்த தொழிலாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி முடிவைக் கைவிட்டு அந்த 43 ஓட்டுநர்களை மாநகராட்சி ஊழியர்களாகவே தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓட்டுநர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ஓட்டுநர்களின் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன், பிரணாப், தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். இதில் 43 ஓட்டுநர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: