கோவை, ஆக.1-
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, ரத்தினபுரி அருகேகண்ணப்பநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (29). இவர், மனைவி ஸ்டெல்லா மேரி மற்றும் 5 வயது மகனுடன் வசித்து வந்தார். ராஜேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமலும், வீட்டு செலவிற்கும் பணம் கொடுக்காமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 28.2.2012 அன்று மது குடித்து விட்டு வந்த ராஜேஷ், வீட்டு செலவுக்கு பணம் கேட்ட மனைவியிடம் தகாத வார்த்தையில் பேசியும் அடித்தும் துன்புறுத்தினார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த ஸ்டெல்லாமேரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குசிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்டெல்லாமேரியின் தந்தை அருளானந்தம் அளித்த புகாரின்பேரில், காட்டூர் அனைத்து மகளிர் காவர்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி மணிமொழி முன்னிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை திங்களன்று நடந்தது. விசாரணைக்கு பின்பு ராஜேஷ் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: