திருப்பூர், ஆக.1 –
திருப்பூரில் மதுபானம் குடிக்க பணம் தராததால் சேலையால் கழுத்தை நெறித்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் 15வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரில் சேகர் (வயது 43), அவரது மனைவி இந்திரா (33) ஆகியோர் தங்கள் இரு மகன்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்தனர். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இங்கு வந்து வசித்து வந்தனர். இப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் இந்திராகாந்தி தையல் தொழிலாளியாகவும், சேகர் ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வந்தனர்.

அவர்களுடைய மகன்கள் 2 பேரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை முதல் சேகருடைய வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. செவ்வாயன்று காலை சேகர் தனது இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் சென்ற சேகரின் மகன்கள் 2 பேரும் தாய் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுது கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் கணவன் சேகர் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகக் கூறி 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சிவகாமியிடம் சென்று சரணடைந்தார். பின்னர் சிவகாமி சேகரை 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரை கைது செய்த காவலர்கள் விசாரணை நடத்தியதில், மதுபானம் குடிக்க பணம் தராததால் மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த விபரத்தைத் தெரிவித்தார். இதன் பிறகு கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, திருவண்ணாமலைக்குச் சென்று அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனச் சொல்லி இரு மகன்களையும் கூட்டி வந்ததாகத் தெரிவித்தார். இதன்பின் இந்திராகாந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலையாளி சேகரை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.