திருப்பூர், ஆக.1 –
திருப்பூரில் பொதுமக்களின் கோபாவேச முற்றுகைப் போராட்டம் காரணமாக புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. திருப்பூர், வீரபாண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட சுண்டமேடு குப்பாண்டம்பாளையம் சாலையில் ஏ.டி.காலனி அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க அனுமதியளிக்கக் கூடாது என்று திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். எனினும் மக்கள் எதிர்ப்பையும் மீறி திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

இந்நிலையில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதி பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் அந்த கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் குடியிருக்கும் பகுதியை ஒட்டி இந்த மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளதால், குடியிருப்புவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். பெண்கள், பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்குதுணை வட்டாட்சியர் முருகேஷ், வீரபாண்டி காவல் நிலையத்தார் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஆட்சியரிடமிருந்து மறுஉத்தரவு வரும் வரை, மதுக்கடை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முற்றுகைப் பேராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.