திருப்பூர், ஆக.1 –
காங்கயம் தாலுகாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரிய உதவிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காங்கயம் தாலுகா சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.காங்கயம் சென்னிமலை சாலையில் உள்ள ஸ்ரீஹாலில் செவ்வாயன்று காங்கயம் தாலுகா சிஐடியு கட்டிடகட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் 14ஆவது தாலுகா மாநாடு நடைபெற்றது. தாலுகா தலைவர் கே.ஆர்.கண்ணையன் தலைமை ஏற்க, மூத்த உறுப்பினர் அய்யாவு கொடியேற்றினார். பழனிசாமி வரவேற்றார். சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் எம்.சந்திரன் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இதில் செயலாளர் எம்.கணேசன், பொருளாளர் என்.வீராசாமி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்துணைத் தலைவர் கே.திருவேங்கடசாமி வாழ்த்திப் பேசினார்.இதில், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருட்கள் விலைஉயர்வினால் கட்டுமானத் தொழில் முடங்கிக் கிடக்கிறது. எனவே அரசே மணல் கொள்முதல் செய்து தாலுகா அளவில் குடோன் இருப்புவைத்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி கட்டுமானத் தொழில் சீராக நடைபெறவும், இந்த தொழிலை நம்பிவாழும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து நலவாரிய உதவிகளை உடனே கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் காங்கயம் தாலுகா தலைவர் கே.ஆர்.கண்ணையன், செயலாளர் எம்.கணேசன், பொருளாளர் என்.வீராசாமி, துணைத் தலைவர்கள் பழனிசாமி, பொடாரன், துணைச் செயலாளர்கள் குப்புசாமி, பழனிசாமி மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் காங்கயம் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூறு பேர் பங்கேற்றனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.குமார் உரையாற்றினார். முடிவில் ரங்கராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.