திருப்பூர், ஆக.1 –
திருப்பூர் மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகளை சுத்தமாக வைப்பதினால் நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை தடுத்திட முடியும். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக மருந்து, மாத்திரைகள், நிலவேம்புக் குடிநீர், மலைவேம்பு குடிநீர், பப்பாளி இலை சாறு போன்றவற்றை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் உடலில் ஏதேனும் காய்ச்சல் குறித்தஅறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களை அணுகி தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டு, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், சிறப்பு துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று தண்ணீர் தொட்டி, பாத்திரங்கள், கழிவுநீர் வாய்க்கால் ஆகியவற்றை சுத்தமாக, சுகாதாரமாக உள்ளதா என்பதனை கண்காணிக்கப்பட்டு, வீதிகளில் டெங்கு கொசு பராவாமல் தடுத்திட கொசு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகளில் உள்ள நான்கு மண்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு தேவையான பரி
சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.முன்னதாக, மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது மண்டலம், நேதாஜி வீதியில் டெங்கு தடுப்பு பணிகளை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.