ஈரோடு, ஆக.1-
சாதிய ஆணவத்துடன் தலித் இளைஞரைத் தாக்கியோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துணைக் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நசியனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தாலுகா, நசியனூர் அருகே கடந்த ஜூன் 28ம் தேதியன்று டீ கடையில் சேரில் அமர்ந்து டீ குடித்ததற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரியசாமி, லேகேஷ், நந்தகுமார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அவரின் சாதிப் பெயரைச் கூறி இழிவாக பேசி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளித்து ஒரு மாதம் கடந்த நிலையிலும், இதுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மேலும், இதுதொடர்பாக உண்ணாவிரதம் உள்ளிட்ட கண்டன இயக்கங்களை நடத்த அனுமதி மறுத்து, சாதிய ஆதிக்க சக்தியினருக்கு ஆதரவாக பவானி துணை காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலித் இளைஞரை சாதிய வன்மத்துடன் தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நசியனூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீ.ஒ.மு. தாலுகா தலைவர் கே.சென்னியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மா.அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, தாலுகா செயலாளர் டி.தங்கவேலு, என்.பாலசுப்பிரமணியன், வாலிபர் சங்க நிர்வாகி விஸ்வநாதன், எம்.நாச்சிமுத்து, வி.தொ.சங்கத்தின் வ.இளங்கோ ஆகியோர் கண்டனஉரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். முடிவில் என்.நாகராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.