.
எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவது பற்றிய செய்தியின் விபரங்கள் இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை. படிப்படியாக இது அமுலுக்கு வந்து விடும் என்றுதான் தெரிகிறது. ஆனால் அப்படி செய்வதற்கு முன் அரசாங்கம் இந்தப் பதிவை கவனிப்பது உபயோகமாக இருக்கும்.

ஐநா-வின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உலகளாவிய ஆய்வு நடத்தி 2014ல் அதனை அறிக்கையாக வெளியிட்டது (1). அந்த ஆய்வறிக்கையில், இல்லங்களில் தூய்மையான சமையல் எரிவாயு கிடைப்பது பற்றி பேசும்போது உலகில் தூய்மையான எரிவாயு இல்லாத பகுதிகளில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்து இந்தியாவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் வறட்டி, விறகு, கரி போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த வீடுகளில் எல்லாம் சமையலறையில் சிம்னியோ, exhuast fan எனப்படும் புகைப்போக்கி விசிறி எதுவும் இருக்காதுதானே? பாதி வீடுகளில் சமையலறையே தனியாக இருக்காது. ஒரே அறை உள்ள வீட்டில் ஒரு மூலையில் சமையல் நடக்கும். அப்போது சமைக்கும் பெண்களும் அவரருகே இருக்கும் குழந்தைகளும் அந்தப் புகையை சுவாசிக்க நேருகிறது.

இல்லங்களில் விறகு அடுப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் கர்க் ஸ்மித், அந்த அடுப்புகளால் ஒரு மணிநேரத்தில் வரும் புகை 400 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்று சொல்கிறார்.(2)

இந்த மாதிரி புகை அடுப்புகளால் உலகெங்கும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 40 லட்சம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கை (3) தெரிவிக்கிறது. இதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற வியாதிகள் இவர்களைத் தாக்குகின்றன. இதற்கு பெண்கள், குழந்தைகள்தான் முக்கியமாக பலியாகிறார்கள்.

இந்த நோய்த் துன்பங்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதில் மற்றும் முழுமையாக நிறுத்துவதில் எரிவாயு அடுப்பு முக்கியப் பங்காற்றுகிறது. இப்போதும் இந்தியாவில் காஸ் அடுப்புகள் பெரிதும் பயன்பாட்டில் இருக்கும் கேரளா, தமிழ் நாடு போன்ற பகுதிகளில் இந்தப் பிரச்னை பெருமளவு இல்லை. கரி, விறகு, வறட்டி அடுப்புகள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் மத்தியப் பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான், பீஹார் போன்ற மாநிலங்களில்தான் பெருமளவிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்தப் பிரச்சனையை முழுமையாகப் போக்க தேசமெங்கும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், எரிவாயுவை சமையல் பயன்பாட்டுக்கு அதிகரிக்க வேண்டும். எரிவாயு மானியங்கள் மற்றும் இலவச காஸ் அடுப்புகள் வழங்குவது இதற்கு பெருமளவு உதவி செய்கின்றன.

உலகெங்கும் இந்த எரிவாயு மானியங்களை ஆராய்ந்து உலக நிதி நிறுவனம் (IMF) நடத்திய ஆய்வறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த இறப்பு விகிதம் 55% சதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது (4).

எரிவாயு மானியம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் வழங்கப் படுகிறது. அமெரிக்காவே கூட எரிவாயுவுக்கு 3.2 பில்லியன் டாலர் அளவுக்கு மானியம் கொடுக்கிறது. சைனா, பங்களாதேஷ் முதல் அமெரிக்கா வரை காஸ் மானியம் கொடுக்காத தேசமே இல்லை என்ற அளவுக்கு இது நடந்து வருகிறது.

முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலத்தில், ஊரகப் பகுதிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் திட்டத்தை ‘ராஜிவ் காந்தி எரிவாயு விரிவாக்க திட்டம்’ என்ற பெயரில் இலவச அடுப்பு கொடுக்கும் திட்டம் நடத்தப்பட்டு வந்தது. மோடி அரசு வந்ததும் அதனை ‘பிரதம மாதிரி ஒளியேற்றும் திட்டம்’ என்று பெயர் மாற்றி தொடர்ந்தது. (5) இந்த ஆட்சிக்காலம் முடிவதற்குள் 5 கோடி வீடுகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் முனைப்பு தொடர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்பட்டது.

இப்போது வரும் கேள்வி இதுதான்: எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டு விட்டால் இந்த ஐந்து கோடி வீடுகள் திரும்பவும் விறகு / வறட்டி அடுப்புகளுக்கு போய் விட மாட்டார்களா? அப்போது இந்த அடுப்புகளுக்கு செய்த அரசு செலவு என்னவாகும்? தவிர, மானியம் கொடுத்துமே கூட சிலிண்டர் வாங்க இயலாத மக்கள் இருக்கிறார்கள். இவர்களும் கூட பழைய முறை அடுப்புகளுக்கு திரும்ப நேரிடலாம். இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

அரசு, நாங்கள் பொதுவாக மானியங்களை நிறுத்தப் போவதில்லை, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும்தான் நிறுத்தப் போகிறோம் என்று சொல்லலாம். அதுவும் பிரச்சனையை தீர்க்க உதவப் போவதில்லை. மானியங்களில் Entitled Subsidies மற்றும் Universal Subsidies என்று இருவகைகள் உள்ளன. முதலாம் வகை, Entitled Subsidies, குறிப்பிட்ட பிரிவினருக்கான என்று தரப்படுவது. வருமான வரம்பு போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு வருவது இந்த முறைமை. இரண்டாவது, Universal Subsidies, எந்த வரம்பும் இன்றி எல்லாருக்கும் கொடுப்பது. இதில் Universal Subsidies இருக்கும் மானியத் திட்டங்கள்தான் பெருமளவு அந்தத் திட்டங்களுக்கான நோக்கத்தை அடைகின்றன. அப்படி இல்லாதவை பெரும்பாலும் தோல்வி அடைகின்றன. இதனை விலாவாரியாக அலசி An Uncertain Glory புத்தகத்தில் அமர்த்திய சென் மற்றும் ழான் த்ரே இந்த முடிவுக்கு வருகிறார்கள். மானியம் தேவைப்படாத மக்கள் தானாகவே முன்வந்து மானியத்தை திருப்பும் முறைமைதான் சிறந்தது. அதற்கு அரசு மக்களை தயார்படுத்த வேண்டும். மற்றபடி பொது மானிய முறை (universal subsidies) அமுலில் இருக்க வேண்டும்.

அப்படியானால் நமது வரிப்பணம் மானியம் கட்டி ‘நாசமாய்ப்’ போகத்தான் வேண்டுமா என்று உங்களுக்கு கேள்வி வரலாம். அதற்கு பதில் இருக்கிறது. பழைய அடுப்பு வகைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கும் அரசுதான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. (வறட்டி அடுப்பு பயன்படுத்தும் யாரும் அப்போலோ போவதில்லை.) அப்போது அதற்கும் நமது வரிப்பணம்தான் செலவாகிறது. அதனை தடுப்பதன் மூலம் சுகாதாரச் செலவை குறைக்கலாம்.

தவிர, சமையலை எளிதாக்குவதால் அதற்கு தேவைப்படும் மனித உழைப்பு குறைந்து அந்த உழைப்பு வேறு இடங்களில் செலுத்தப்படுகிறது. கூடவே விறகு, கரி ஆகியவற்றின் பயன்பாடு குறைவதால் அவற்றால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு குறைகிறது. அல்பாயுசில் சாகாமல் ஆயுட்காலம் அதிகரிப்பது, உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு வழி செய்கிறது. இவற்றை எல்லாம் கணக்கிட்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு அறிக்கையை தயார் செய்திருக்கிறது.(6) அதில், மானியத்துக்காக 13 பில்லியன் டாலர்கள் செலவானால், அதன் பலனாக தேசத்துக்கு 90 பில்லியன் டாலர்கள் திரும்பக் கிடைக்கின்றன என்று கூறி இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட எட்டு மடங்கு. அந்தப் ‘பலன்’ என்பது இந்த சுகாதாரச் செலவு மிச்சமாவது, சுற்றுச்சூழல் மாசு குறைவதன் மூலம் செலவு குறைவது, மனித உழைப்பு அதிகரிப்பதன் மூலம் வரும் வருமானம் இவற்றால் கிடைக்கிறது. தவிர, அந்தக் குடும்பத்தின் வாழ்வுத் தரம் உயர்வதன் மூலம் பணத்தையும் மீறிய பலன் அவர்களுக்கு கிடைக்கிறது. எனவே இந்த மானியத்தை ‘மானியம்’ என்று சொல்வதை விட ‘முதலீடு’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஆனால் மேம்பாலங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள் இவைதானே நமக்கு முதலீடுகளாகத் தெரிகின்றன? நாளைக்கே நமது வீட்டுக்கு அருகே ஒரு பெரிய மால் அல்லது மல்டிப்ளெக்ஸ் வந்து விட்டால் தேசம் முன்னேறுவதாக நாம் நம்பி விடுகிறோம் அல்லவா? ஒரு அணு உலை வரப்போகிறது என்றால் உடனே இந்தியா வல்லரசாக ஆகி விட்டது என்று அர்த்தம் இல்லையா? இலவசங்கள்தானே தேசப்பொருளாதாரத்தை நாசம் பண்ணுகிறதாக நமக்கு கற்பிக்கப் பட்டிருக்கிறது? ஆகவே, சமையல் எரிவாயு மானியத்தை நிறுத்தி விட்டால் சீனாவை நாம் முறியடித்து விடுவதை யாராலும் தடுக்க முடியாதுதானே?

தரவுகள்:
========
1) United Nations Industrial Development Organisation – UNIDO: Sustainable Energy for All – https://goo.gl/6Y5bPU
2) Kirk R Smith – Indoor Air Pollution: https://goo.gl/FhxHWx
3) The World Health Organization Household Air Pollution and Health report – https://goo.gl/oBCfz4
4) How Large Are Global Fossil Fuel Subsidies – https://goo.gl/CvbTE7
5) Pradhan Mantri Ujjwala Yojana: https://goo.gl/LmGJQV
5) World Health Organisation – Evaluation of the Costs and Benefits of Household Energy and Health Interventions: https://goo.gl/e5pqTB

(இந்தப் பதிவை சரிபார்த்து, திருத்தங்கள் வழங்கி, கூடவே சில தரவுகளையும் கொடுத்த Shahjahan சாருக்கு நன்றிகள் பல.)

Sridhar Subramaniam

Leave A Reply

%d bloggers like this: