திருப்பூர், ஆக.1 –
ஏழை, எளிய, சாமானிய குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் மறுக்கப்படும் என்று மாநில அரசு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதைக் கைவிட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி வழங்க வலியுறுத்தி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

குடும்ப வருமானம் மாதம் ரூ.8334 இருந்தால், மூன்று அறைகள் கொண்ட வீடுகளில் வசித்தால், குளிர்சாதன வசதி, பிரிட்ஜ் இருந்தால் இனி நியாய விலைக் கடைகளில் ரேசன் பொருட்கள் வழங்கப்படாது என்று உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏழை, எளிய, சாமானியகுடும்பங்களைக் கடுமையாக பாதிக்கும் இந்த அறிவிப்பைக் கைவிட்டு அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி புதன்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, திருப்பூர் வடக்கு மாநகர கமிட்டி சார்பில் புது பேருந்து நிலையம் முன்பாகவும், தெற்கு மாநகரக் கமிட்டி சார்பில் கருவம்பாளையத்திலும், தெற்கு ஒன்றியக் கமிட்டி சார்பில் நல்லூரிலும், வடக்கு ஒன்றியக் கமிட்டி சார்பில் பாண்டியன் நகரிலும், வேலம்பாளையம் நகரக்குழுசார்பில் அ.புதூர் கோவை டிபார்ட்மெண்டல் அருகிலும், அவிநாசி புது பேருந்து நிலையம் எதிரிலும், ஊத்துக்குளி ஆர்.எஸ்.பேருந்து நிறுத்தம் அருகிலும், உடுமலைநகரில் பேருந்து நிலையம் அருகிலும், உடுமலை ஒன்றியத்தில் குறிச்சிக்கோட்டையிலும், குடிமங்கலத்தில் மூங்கில்தொழுவு பிரிவிலும், பல்லடத்தில் பேருந்து நிலையம் எதிரிலும், பொங்கலூரிலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணியளவில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

மேலும், தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பாக புதன்கிழமை காலை 10 மணிக்கு
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.