திருப்பூர், ஆக.1 –
திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் தொல்லியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொல்லியல் சான்றுகள் காட்சிப்படுத்தல் மற்றும் கருத்தரங்கு நிகழ்வு செவ்வாயன்று நடந்தது. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது. கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் எஸ்.எம். நசீம்ஜான் தலைமை வகித்தார். தொல்லியல் ஆய்வு மைய இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் ஆய்வு மைய உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பழைய கற்கால கருவிகள், புதிய கற்கால கருவிகளான வளவளப்பான ஆயுதங்கள், பிளேடு போன்ற அழிப்பான்கள், தானியங்களை அரைக்கும் வீட்டுக்கருவிகள், கி.மு.1200 முதல் கி.மு 600 வரையிலான குறியீடுகள், குங்குமச்சிமிழ் போன்ற கல்லால் ஆன மூடிகள், கல்மணிகள், மட்பாண்டங்கள், விளையாட்டு கருவிகள், இரும்பு உருக்கப் பயன்படுத்தப்படும் மண் ஊது குழல்கள், மட்பாண்ட கலங்கள் ஆகியவை கல்லூரி மாணவிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. வரலாற்றுத்துறையை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலையை சேர்ந்த மாணவிகள் 325 பேர் ஆர்வமுடன் இவற்றைப் பார்வையிட்டனர். அதேபோல் முதுகலை தமிழ்த்துறை மாணவிகளும் தொல்லியல் சான்றுகளை பார்வையிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.