ஈரோடு, ஆக.1-
ஈரோடு மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட ஈமு நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஆக.22 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தெரிவித்ததாவது:- ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த சிரகிரி பார்ம்ஸ், ஸ்டார் ஈமு பார்ம்ஸ், கேஜி பிரைட் லைவ்ஸ்டாக் நிறுவனம், அம்மன் ஈமு, பவானி அல்மா ஈமு பார்ம்ஸ், கோபி சி.என்.செல்வகுமார் ஈமு அன்ட் ஹேட்சரிஸ், கொங்கு நாடு ஈமு பார்ம்ஸ், தீரன் பவுல்டரி, கிரீன் லைப் பார்ம்ஸ், என்.எஸ்.அக்ரோ பார்ம்ஸ் அன்ட் ஹேட்சரி, ராம் கன்ட்ரி சிக்ஸ், குயின் ஈமு ஆகிய நிறுவனங்களின் அசையும் சொத்துக்கள் மோசடி வழக்கில் முடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவை டான்பிட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைப்படி, முடக்கம் செய்யப்பட்ட பொருட்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதன்படி, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தளவாட பெருட்கள், அலுவலக பொருட்கள் ஆகியவை வரும் ஆக.22 ஆம் தேதி மதியம் 3மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், பிணை வைப்பு தொகையாக இருசக்கர வாகனத்திற்கு தலா ரூ.10 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம், தளவாட மற்றும் அலுவலக பெருட்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கான தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் competent Authority and District Revenue officer, Erode என்ற பெயரில் வங்கி வரவோலையாக பெற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வரவோலையை இணைத்து ஆக.22ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இதற்கான ஏலவிபரம், நிபந்தனைகள் www.erode.tn.nic.in என்ற இணைய தள முகவரியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.