கோவை, ஜூலை 31
வீட்டை அபகரிக்க முயற்சி செய்வாதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பிள்ளையார்புரம் கோலப்பொடி மலையை சேர்ந்தவர் ராஜா (45). இவர் திங்களன்று தனது 4 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து திடீரென தன் மீதும், குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து சென்று, மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்தனர்.

மேலும் குழந்தைகள் மற்றும் ராஜா மீதும் தண்ணீர் ஊற்றி, தீக்குளிப்பை தடுத்து நிறுத்தினர். பின்னர் ராஜாவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது ராஜா கூறியதாவது: நான் எனது குழந்தைகளுடன் கடந்த 11 ஆண்டாக கோலப்பொடிமலையில், வீடுகட்டி குடியிருந்து வருகிறேன். எனது மனைவி செல்வி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் எனது வீடுஅருகே கோயில் கட்ட சிலர் ஏற்பாடுசெய்கின்றனர். இதனால் எனது வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர்.

எனக்கு அவர்கள் மாற்று ஏற்பாடு ஏதும் செய்து தரவில்லை. ஆனால், என்னை தாக்கி இடத்தை அபகரிக்க முயல்கின்றனர். இது தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்றேன் என்றார். இதையடுத்து காவல் துறையினர் ராஜாவை எச்சரித்து அனுப்பினர்.கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது 4 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயன்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.