மேட்டுப்பாளையம், ஜூலை 31-
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்தை யொட்டியுள்ள சிறுமுகை அருகேயுள்ள கிராமமான இலுப்பநத்தத்தில் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் அடிக்கடி புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இவற்றை தடுக்க அவரவர் தோட்டங்களை சுற்றி அகழி வெட்டிக் கொள்ளவும், சூரிய ஒளி மூலம் இயங்கும் சோலார் மின்வேலி அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பலரும் இம்முறையை பயன்படுத்தி வனவிலங்குகளிடம் இருந்து தங்களது விவசாய பயிர்களை காத்துக் கொள்கின்றனர்.அதேநேரம், ஒரு சிலர் சட்டத்திற்கு புறம்பாக தோட்டத்தை சுற்றியுள்ள இரும்பு கம்பி வேலியில் பாசன கிணற்று மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் உயரழுத்த மின்சாரத்தை நேரிடையாக பாய்ச்சி விடுகின்றனர். தடை செய்யப்பட்ட இதுபோன்ற நடவடிக்கையினால் இப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகளும், பன்றிகளும் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த மின் வேலியில் சிக்கி பள்ளி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தனது வாழை மரங்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காப்பாற்றும் நோக்கில் தோட்டத்தைசுற்றி இரும்பு கம்பி வேலி அமைத்துள்ளார். இதன்பின் சட்டவிரோதமாக தரையில் இருந்து அரையடி உயரத்தில் கம்பி கட்டி அதில் கிணற்று மோட்டாருக்கான உயரழுத்த மின்சாரத்தை நேரிடையாக பாய்ச்சியுள்ளார். இந்நிலையில் ஞாயிறன்று மதியம் இத்தோட்டத்தின் அருகே விளையாடச் சென்ற இதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹரிபிரசாந்த் என்ற பள்ளி மாணவர் மின்வேலியில் சிக்கி அதன் மீதே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த தோட்ட உரிமையாளரான வீரபத்திரன், இலுப்பநத்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா என்பவரின் கணவர் என்பதால் காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்யவில்லை. இதனை பயன்படுத்தி வீரபத்திரன் தலைமறைவான நிலையில், தற்போது அவரை தேடி வருவதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், மின் வேலியில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: