கோவை, ஜூலை 31-
கோவை மக்களின் அமைதியை குலைக்கும் மதவெறி சக்திகளை தனிமைப்படுத்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என கோவை மக்கள் மேடையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மக்கள் மேடையின் விரிவடைந்த ஆலோசனை கூட்டம் கோவை ராம்நகரில் உள்ள ஹோட்டல் சுபஸ்ரீ அரங்கத்தின் ஞாயிறன்று மாலை நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்தத கூட்டத்தில் மக்கள் மேடையின் முன்மொழிவுகளை ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன் முன்வைத்தார். இதில், கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகாலமாக மதஅடிப்படைவாத அமைப்புகளின் மதவெறி செயல்பாடுகளால் அமைதியின்மை நிலவுகிறது.

 இத்தகைய மோசமான செயல்பாடுகளால் மாவட்டத்தின் அடையாளம் சிதைந்துவிடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. ஆகவே மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய அமைப்புகளைச் சார்ந்த அமைப்புகளும், மக்கள் நலனில் அக்கறையுள்ள நமது கோவையை சேர்ந்த முற்போக்கு ஜனநாயக சக்திகள், அறிவு மட்டத்திலான அறிஞர்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்து பல்வேறு சுற்றுகள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கோவை மக்கள் மேடை என்கிற அமைப்பு உருவாகியுள்ளது. இவ்வமைப்புகளின் இயக்கச் செயல்பாடுகளில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், மதவெறியர்களை தனிமைப்படுத்துவது என்கிற ஒற்றை கோரிக்கைக்காக ஒரு மனிதனாக எழுந்து நின்று செயல்படுவது என முடிவெடுத்துள்ளோம். இதன் துவக்க விழாவை எழுச்சியாக நடத்துவது என்கிற அடிப்படையில் ஆகஸ்டு 21 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி பொது நிகழ்ச்சியை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ணகாந்தி, பிரகாஷ்காரத், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், கனிமொழி எம்.பி மற்றும் மக்கள் மேடை அமைப்பில் அங்கம் வகிக்கிற மாநில நிர்வாகிகள், சர்வமத தலைவர்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டை உயர்த்திப்பிடிக்கிற ஆளுமைகளை அழைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  மேலும், ஒன்றிய அளவில் பள்ளி, கல்லூரிகளில் மதச்சார்பின்மையை முன்வைத்து கருத்தரங்கம், கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்துவது. மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வது. கோவையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற சக்திகளின் முயற்சியை முறியடிக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம், சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் ஜெயபால், மதிமுகவின் மு.கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலையரசன், சிபிஐ (எம்எல்) பாலசுப்பிரமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், திராவிடர் கழகத்தின் தியாகு, பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் யு.கே.சிவஞானம், எம்எல்எப் தொழிற்சங்கத்தின் பார்த்தசாரதி, சிஐடியு எஸ்.ஆறுமுகம், ஏஐடியுசி தங்கவேல், ஏஐசிசிடியு தாமோதரன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி விளவைராமசாமி, மற்றும் ஆதித்தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர். இதில் இவ்வமைப்புகளின் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: