கோவை, ஜூலை 31-
60 சரவன் தங்கத்தை தவறவிட்ட தொழிலதிபரின் நகைகளை, சாலையில் கண்டெடுத்த சிஐடியு ஆட்டோ தொழிலாளி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.  கோவை காந்திபூங்காவை அடுத்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ தொழிலாளியான இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், அஜித் என்ற மகனும், ஜஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஸ்டேன்டில் வண்டியை நிறுத்தி வாடகை ஏற்றி வருகிறார். இந்நிலையில் திங்களன்று காலை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் மஞ்சப்பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.முத்துக்குமார், கிளைத் தலைவர் அமல்ராஜ் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் கோவை மாநகர காவல்துறை  ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தங்க நகைகளை ஒப்படைத்தார். முன்னதாக, கோவையில் மொத்த புத்தக வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் சுவாமிநாதன் என்பவர் திங்களன்று தனது மேலாளர் பழனிச்சாமியிடம் 20 தங்கநாணயங்கள் மற்றும் நகைகள் என மொத்தம் 60 சவரன் (அரைக்கிலோ) தங்கத்தை கொடுத்து வங்கியில் நகையை அடகுவைத்து பணத்தை பெற்று வருமாறு அனுப்பியுள்ளார். இதையடுத்து பழனிச்சாமி நகைகளை மஞ்சள் பையில் சுற்றி வைத்து, தனது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் வைத்து வங்கிக்கு சென்ற வழியில் நகைகளை தவறவிட்டுள்ளார். வங்கிக்கு சென்ற பின்னர், வாகனத்தில் வைத்திருந்த நகைப்பை காணாமல்போனது கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, தனது முதலாளியிடம் தகவலை கூறி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

இதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்த காவல் ஆணையர் அமல்ராஜ், தொலைக்கப்பட்ட நகைகள் தொடர்பான அடையாளங்களை சுவாமிநாதனிடம் கேட்டுள்ளார். இதில் முனியப்பன் ஒப்படைத்த நகைகளும், இவர் சொன்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் நகை பையை ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முனியப்பனுக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியை அளித்து கௌரவித்தார். இதேபோல், தொழிலதிபர் சுவாமிநாதனும், ஆட்டோ ஓட்டுநர் முனியப்பனுக்கு வெகுமதியளித்து நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: