பொள்ளாச்சி, ஜூலை 31-
கக்கூஸ் என்ற ஆவணப்படம் துப்புரவு தொழிலாளர்கள் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல, மாறாக, சாதி ஒழிப்பிற்கான கருவியே கக்கூஸ் என சமூக செயற்பாட்டாளர் வழக்குரைஞருமான திவ்யபாரதி தெரிவித்தார்.பொள்ளாச்சி அடுத்த கள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் ஞாயிறன்று மாலை தமிழ் தேசியவிடுதலை இயக்கத்தின் சார்பில்கக்கூஸ் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கக்கூஸ் ஆவணப்படத்தின் இயக்குனர் திவ்யபாரதி பேசுகையில், கக்கூஸ் ஆவண படமானதுதுப்புரவு தொழிலாளர்கள் கைகளால் மலம் அள்ளிக்கொண்டிருப்பதையும், சாக்கடைக் குழிகளில் விஷ வாயுக்கள் தாக்கி உயிரிழந்த துப்பரவு தொழிலாளர்களை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கின்ற இந்திய அரசாங்கத்தின் கள்ள மௌனத்தை வெளிக்காட்டுத்துவதற்காக எடுக்கப்பட்டது.  குறிப்பாக, இந்தியாவில் தலித் மக்களை மட்டுமே துப்புரவு தொழிலுக்கு ஈடுபடுத்துகிறது அரசாங்கம். 2013 ஆவது ஆண்டின் சட்டப்படி தமிழ்நாடு முழுவதும் வெறுங்கைகளால் மலம் அள்ளக்கூடிய துப்புரவு தொழிலாளர்களை முறையாக கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

மேலும், அவர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ 2016ம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் வரை வெறுங்கைகளால் மலம் அள்ளும் துப்பரவு தொழிலாளர்கள் வெறும் 339 பேர் தான் இருப்பதாக பொய்யான ஒரு தகவலை அளித்தது. உண்மையில், கோவை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 450க்கும் மேற்பட்ட கையால் மலம் அள்ளக்கூடிய துப்பரவு தொழிலாளர்கள் உள்ளனர். அதிலும், நிரந்தர துப்பரவு பணியாளர், ஒப்பந்த பணியாளர், தினக்கூலி மற்றும் பதில் ஆள் என நான்கு வகையாக துப்பரவு தொழிலாளர்கள் பிரித்து காண்பிக்கப்பட்டனர். இதேபோல், மத்திய மோடி அரசோ, இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 212 பேர் தான் துப்பரவு தொழிலாளர்கள் என வெளிப்படையாகவே பொய்யான அறிக்கை விடுகிறது என திவ்யபாரதி குற்றம் சாட்டினார்.

மேலும், மதவெறி பா.ஜ.க அரசை இயக்கும் சங்பரிவார அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் இருந்து கடந்தஒரு வார காலமாக கொலை மிரட்டல் மற்றும் தகாத முறையில் ஒருமையான வார்த்தைகளிலும், கொச்சையான சொற்களை பயன்படுத்தி அலைபேசிகளில் மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் மிகுந்த வருத்தத்துடன் கூறினார். முன்னதாக, இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுசுகாதாரம் சங்கத்தின் பொள்ளாச்சி கோட்டத்தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். த.அ.அ.து.தொ.சங்கத்தின் பொள்ளாச்சி கிளை செயலாளர் ப.முருகானந்தம் முன்னிலை வகித்தார். தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வே.பாரதி கக்கூஸ் திரைப்படத்தினை சிறப்பித்து பேசினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில கழக வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன், அசோக்குமார், வழக்கறிஞர் சிவராஜ், சமூக செயற்பாட்டாளர் கௌசல்யா சங்கர், தென்னை தொழிலாளர்கள் பேரவை கருப்பசாமி மற்றும் ஆதித்தமிழர் பேரவை மாநிலக் குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், சமூக செயல்பாட்டாளர் கண்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: