திருப்பூர், ஜூலை 30-
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் தொடர்பான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், இந்திய அரசின் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத் தலைவர் முருகன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் அதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தேசிய துணைத்தலைவர் முருகன் தெரிவிக்கையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பள்ளி கல்வித் துறையின் மூலம் தனியார் பள்ளிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவ, மாணவிகளுக்கு உரிய இடம் வழங்கிடவும், வருவாய்த் துறையின் மூலம் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு முதியோர்களுக்கு வழங்கிடவும், திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவையின்றி ஊதியம் உடனடியாக வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தாட்கோ மூலம் தொழில் முனைவோர்களுக்கு உரிய வங்கி கடன் பெற்று வழங்கிடவும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தி வசூல் செய்யக் கூடாது எனவும், அவ்வாறு கண்டறியப்பட்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கனரா வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களை எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு எவ்வித கால தாமதமின்றி உரிய முறையில் வழங்கிட வேண்டும். மேலும், இதனை பொது மக்கள் தெரிந்து பயன்பெறும் வகையில் போதிய விழிப்புணர்வினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் சென்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் மதியழகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய ஆய்வு அலுவலர்கள் லிஸ்டர், இனியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், தாராபுரம் சார்ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திவேல், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.