நாமக்கல், ஜூலை 30-
நாமக்கல் மாவட்ட சிஐடியு ரயில்வே கூட்ஸ் தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி விடுவித்தது. நாமக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சிஐடியு சங்கத்தை சேர்ந்த சுமைப்பணி தொழிலாளர்கள் சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் பிஎம்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தும் வகையில், சிஐடியு கூட்ஸ் செட் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்து கடந்த ஜூலை 23ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது பிஎம்எஸ் குண்டர்கள், சிஐடியு தொழிலாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதற்கிடையே, பிஎம்எஸ் அமைப்பினர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 9 தொழிலாளர்களும் நீதிமன்றத்தில் ஜாமின்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிஐடியு கூட்ஸ்செட் தொழிலாளர்கள் ஏ.சண்முகம், ஆர்.மாரிமுத்து, எம்.செல்வம், எஸ்.அருணாச்சலம், பி.பெரியசாமி, பி.சண்முகம், ஏ.ஆனந்த், சி.கந்தசாமி, ஏ.கலைச்செல்வன் ஆகிய 9 தொழிலாளர்களையும் ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜாமினில் வெளிவந்த சிஐடியு கூட்ஸ் செட் தொழிலாளர்களுக்கு ரயில்வே சுமைப்பணி தொழிலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, உதவிச் செயலாளர் கு.சிவராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேஷ், கூட்ஸ் செட் சங்க நிர்வாகிகள் புஷ்பராஜ், வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.