கூடலூர், ஜூலை 30-
பச்சை தேயிலைக்கு சாமிநாதன் குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச விலையான ரூ.30 வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட 9வது மாநாடு ஞாயிறன்று கூடலூரில் கே.ராஜன் நினைவரங்கில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.வாசு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, வி.டி.ரவீந்திரன் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்தர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தன் துவக்க உரையாற்றினார். சிஐடியு தலைவர் ராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லீலாவாசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சி.முருகன் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.

தீர்மானங்கள்:
இம்மாநாட்டில், கூடலூர் பந்தலூர் பகுதியில் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து நிலங்களுக்கும் பட்டாவழங்க வேண்டும். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 வழங்க வேண்டும். இன்டிகோ தேயிலை மற்றும் கூட்டுறவு வங்கி சேரம்பாடியில் நடைபெற்று வரும் முறைகேடுகளை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்டத் தலைவராக என்.வாசு, துணைத் தலைவராக வி.டி.ரவீந்திரன், நரசிங்கம், செயலாளாராக கே,ராஜ்குமார், துணை செயலாளராக சி.முருகன், கோபிநாதன், பொருளாளராக டி.கே.திலிப் உள்பட புதிய மாவட்டக்குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் நிறைவுரை ஆற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.