தாராபுரம், ஜூலை 30 –
தாராபுரம் மற்றும் உடுமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக 6 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என எச்சரித்திருந்தது. இருந்த போதிலும் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வழக்கம்போல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர், தாராபுரம் பகுதியில் உள்ள மொத்த வியாபார கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அண்ணாநகரை சேர்ந்த தண்டபாணி (55), என்.ஜி.ஜி.ஓ.காலனியை சேர்ந்த பாலவெங்கடேஷ் (54), என்.என்.பேட்டை வீதியை சேர்ந்த ஆஷாராம் (30) ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வியாபாரிகள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, தாராபுரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இதேபோல், உடுமலை பகுதியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 10 கிலோ அளவிற்கான தடைசெய்யபட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதனை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.