கோவை, ஜூலை 30-
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மாணவர் ஒரு நபரை அழைத்து வரும் புதிய முயற்சியை தேசிய மாணவர் படையை சார்ந்த மாணவர்கள் மேற்கொண்டனர்.  கோவை புலியகுளம் அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் உள்ள தேசிய மாணவர் படை, கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் கோவை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண்பரிசோதனை முகாமை ஞாயிறன்று நடத்தியது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். பொதுவாக, இதுபோன்ற இலவச முகாம்களை நற்பணி இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் இயக்கங்கள் நடத்துவதுதான் வழக்கம் என்றாலும், மற்ற முகாமைக் காட்டிலும் இந்த முகாம் சற்றே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மூத்த குடிமக்களை மதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியோடு இந்த இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இப்பள்ளியில் உள்ள தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் ஒரு பார்வை குறைபாடு உள்ள பெரியவரை முகாமுக்கு அழைத்து வரவேண்டும். பின்னர் சிகிச்சை பெற்றவுடன் திரும்ப அதே மாணவர் அவர்களை வீட்டில் விட்டு வரவேண்டும் என்பதே இந்த புதிய முயற்சி. இதுகுறித்து தேசிய மாணவர் படையின் அலுவலர் ஆல்பர்ட் அலெக்சான்டர் கூறுகையில், இன்றைய பரபரப்பான நடைமுறை சூழலில் வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து நடப்பது என்பது குறைந்து வருகிறது. தேசிய மாணவர் படை  அமைத்ததன் நோக்கமே மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பது, நம்மை சுற்றியுள்ளவர்களை பாதுகாப்பது, குறிப்பாக பெரியவர்களை மதிக்க வேண்டும் என்கிற மன பக்குவத்தை மாணவர் பருவத்தில் இருந்தே வளர்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தொடர்ந்து மாணவர்களை இது போன்று பழக்கப்படுத்தி வருகிறோம்.

இதன் ஒருபகுதியாகவே இந்த இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்தோம். பொதுவாக இதுபோன்று நடைபெறும் முகாம்களில் மற்றவர்களின் துணையோடு வராதவர்கள் கண்களில் மருந்தை ஊற்றிய பிறகு தங்களது வீட்டிற்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுவர். முகாமில் உள்ளவர்களின் உதவியை கேட்பதற்கும் சங்கடப்படுவார்கள். முகாம் நடத்துபவர்களோ பல்வேறு வேலைகளில் மூழ்கி இப்படி தட்டுத்தடுமாறி நிற்பவர்கள் குறித்த சிந்தனை இருக்காது. இந்நிலையிலேயே மாணவர் ஒருவர் தனது வீட்டருகில் உள்ள ஒரு பார்வை குறைபாடு உள்ளவர்களை அழைத்து வரவேண்டும். பின்னர் அவர்களை வீட்டிலே விடவேண்டும். வீட்டில் விட்டுவிட்டோம் என்கிற தகவலை மீண்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று மாணவர்களிடம் கலந்து பேசி முடிவெடுத்தோம். மாணவர்களும் உற்சாகமாக இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இந்த முகாமில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனையை மேற்கொண்டனர். எமது பள்ளியில் பயிலும் 100 தேசிய மாணவர் படையை சார்ந்த மாணவர்கள் பெரும்பகுதி முதியவர்களை தாங்களே கைகளை பிடித்து அழைத்து வந்து சிகிச்சை முடிந்ததும் திரும்ப அவர்களின் வீட்டில் கொண்டு போய் விட்டனர். இதனால் மாணவர்கள் பெரும் வித்தியாசயத்தை உணர்ந்திருப்பார்கள். இந்த குணம் தங்களது வீட்டிலும் எதிரொலிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.முன்னதாக, இந்த இலவச கண்சிகிச்சை முகாமை அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் மரியஜோசப் துவக்கி வைக்க, அந்தோணியார் துவக்கப்பள்ளி தாளாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கபிரியேல் செல்வராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

-அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.