வருடத்துப் பயிராக இருந்தாலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பாசனத் தேவை குறைந்த பயிர் மரவள்ளி. இது குச்சிக் கிழங்கு, குச்சி வள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

இதன் தாயகம் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியா முதல் இடம்பெறுகிறது. இதில் மாவுப் பொருளான கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அதனுடன் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின்-சி போன்ற சத்துக்களும் உள்ளன. இக்கிழங்கு இருபுறமும் கூம்பு வடிவம் உடையது. உள்ளே கடினமான, இறுக்கமான மாவுப்பொருள் உள்ளது. இதன் தோல் மண்ணின் நிறத்தில் ஒரு மில்லிமீட்டர் தடிமனுடன் காணப்படும். இக்கிழங்கில் அயனோசெனிக்குளுக்கோசைட் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. இந்த நச்சுப் பொருளின் அளவைப் பொறுத்தே கிழங்கானது இனிப்பு மற்றும் கசப்பு சுவை உடையதாக இருக்கிறது.

முறையாக சமைக்கப்படாத கசப்பு சுவையுடைய மரவள்ளி கிழங்கினை உண்பதால் கோன்சோ என்ற நோய் ஏற்படக்கூடும். மேலும் மரவள்ளிக் கிழங்கினை இஞ்சியுடன் சேர்த்து உண்டால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும். இது இந்தியாவில் கேரள மாநிலத்தில் 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கிழங்கிலிருந்து 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். ஜவ்வரிசி இக்கிழங்கிலிருந்து தயார் செய்யப்படுகிறது.மரவள்ளி, உணவுப் பயிரிலிருந்து தற்போது வாழ்வாதாரம் மற்றும் பணப்பயிராக உருவெடுத்துள்ளது.

வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை:
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய காற்றோட்டமான குறு மண் கலந்த செம்மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார நிலை 5.5 முதல் 7.0க்குள் இருப்பது நல்லது. வெப்பமண்டலப் பகுதிகளுக்கு ஏற்றது. ஆண்டு மழையளவு 1000மில்லி மீட்டருக்கு மேல் சீராகப் பெய்யும் பகுதிகளிலும், மானாவாரியிலும் பயிர் செய்து நல்ல விளைச்சலைப் பெறலாம். சமவெளிப் பகுதிகளில் மட்டுமில்லாமல் 3300 அடி வரை உயரம் கொண்ட மலைப் பிரதேசங்களிலும் விளையும் தன்மை இதனுடைய தனிச்சிறப்பு ஆகும்.

பருவமும் நடவும்:
பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். மானாவாரியில் ஏப்ரல் மாதம் நடவு செய்ய வேண்டும். வைரஸ், தேமல் நோய் தாக்கப்படாத ஊக்கமான செடிகளின் நடுப்பகுதி தண்டிலிருந்து விதைக்கரணை எடுத்து பயிர் செய்யலாம். ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக் கரணைகளை பூசன மருந்துக் கரைசலில் ஊற வைத்து நட்டால் நோய் தாக்குதலைத் தடுக்கலாம். மானாவாரி, மற்றும் பாசனப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியைத் தாங்கும் விதமாக ஊட்டச்சத்துக் கரைசலில் கரணை நேர்த்தி செய்ய வேண்டும்.

பார் பிடித்தல்:
மேல் மண் ஆழம் குறைந்த பட்சம் ஒரு அடி இருக்குமாறு உழவிட வேண்டும். பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்யலாம். வளமான நிலங்களில் 3’X3’ இடைவெளி விடலாம். மானாவாரியில் 2’X2’ இடைவெளிப் பார்கள் அமைத்து நடவு செய்யலாம்.

பாசனம்:
நடவின்போது முதல் பாசனமும், மூன்றாவது நாள் தண்ணீரும் விடவேண்டும். அதன் பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்யலாம். அதற்கு மேல் 8 வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த பாசன மேலாண்மை யுக்தியாகும்.

உரமிடல்:
நடவிற்கு முன் அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இடவேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு ரசாயன உரங்கள் இடலாம்.

பின்செய்நேர்த்தி:
நடவு செய்து 20 நாட்களுக்குள் முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்து விடவேண்டும். அப்போது முதல் களையும் எடுத்துவிடலாம். பிறகு 5 மாதம் வரை தேவைப்பட்டால் மாதம் ஒரு களை எடுக்கலாம். நட்டு 60-வது நாளில் செடிக்கு இரண்டு கிளைப்புகளை மட்டும் விட்டு மீதியை அகற்றி விடவேண்டும். இதனுடன் ஊடுபயிராக கொத்தமல்லி இலை, குறுகிய கால பயறு வகைகள், சின்ன வெங்காயம் பயிரிடலாம்.

பயிர் பாதுகாப்பு;
வெள்ளை ஈ, மரவள்ளியைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். இதற்கு 5% வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்கலாம். (100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடி) இப்பயிரானது 10,000 வருடங்களுக்கு முன்பே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மரவள்ளிக் கிழங்கின் பயன்கள்:
இது உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. இதனை தோலுரித்து வெறுமனே அவித்து உண்பது பரவலாக உள்ளது. அவித்தக் கிழங்குடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து உண்பதும் உண்டு. மெல்லிய சீவல்களாக வெட்டி எண்ணெய்யில் பொரித்து உண்பதும் உண்டு. இவ்வாறு செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை மாவாக்கி அரிசி மாவிற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. சவ்வரிசி இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இத்தாவர கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பருத்தி மற்றும் சணல் ஆடைகள் தயாரிப்பிலும், காகிதம் மற்றும் கடினமான அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றது. உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தற்போது மரவள்ளிக் கிழங்கு மாவினைப் பயன்படுத்தி திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.ஒட்டக்கூடிய பசை தயாரிப்பிலும் ஸ்டார்ச் பயன்படுகின்றது.

இதன் பழுத்த, காய்ந்த மற்றும் முற்றிய இலைகள் வெள்ளாடுகளுக்கு நல்ல தீவனம் ஆகும். முதல் வருடம் மட்டும் விதைக் கரணைகளை வெளியில் வாங்கி பயிர் செய்து பின் வருடாவருடம் அவரவர் தோட்டத்திலேயே விதைக் கரணைகளை தயார் செய்யலாம். முதல் மூன்று மாதம் வரை ஊடு பயிர் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம். பழுத்த இலைகள் மக்கி மண்ணுக்கு வளம் சேர்க்கும். மரவள்ளிக் கிழங்கு மாவு கலந்த பாலித்தீன் பைகள் மக்கிப் போகின்றன. குறைந்த செலவில் வறட்சியைத் தாங்கி வளரும் பயிரான மரவள்ளிக் கிழங்கின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அதனை முறைப்படி சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.