பொள்ளாச்சி, ஜூலை 25-
பொள்ளாச்சி மகாலிபுரத்திலுள்ள நகரமன்ற பள்ளியில் அரசு கலைக்கல்லூரி இன்னும்ஒரு வாரத்தில் துவங்கப்படும் என பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் அரசு கலைக்கல்லூரி இல்லாத காரணத்தால் இங்கு உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கோவை, வால்பாறை அல்லது உடுமலைப் பேட்டையிலுள்ள அரசு கலைக்கல்லூரிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். கோவை,உடுமலை, வால்பாறை பகுதிகளுக்கு அன்றாடம் சென்று படிக்கமுடியாதவர்கள் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி கல்வி பயின்று வருகின்றனர்.

அதேநேரம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர்ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 2,500 பேர் படிக்கும் வசதி கொண்ட இந்த பள்ளியில் தற்போது வெறும் 450க்கும் குறைவான மாணவ, மாணவிகளே படித்து வருகின்றனர். மேலும், இங்கு ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது. எனவே, இந்த பள்ளியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு இயக்கங்களை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணைவேந்தர் ஆய்வு:
இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி தலைமையில் திங்களன்று கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் கலைக்கல்லூரி அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்கு பின் துணைவேந்தர் கணபதி கூறுகையில், கல்லூரி அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. எனவே, இங்கு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். முதற்கட்டமாக 5 வகுப்புகளுடன் துவங்கப்பட்டு, பின்னர் அடுத்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறும். அப்போது நிரந்தரமாக கல்லூரி அமைக்கப்பட்டு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாணவர்கள் பயன்படும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வி தரப்படும் என கூறினார்.

வாலிபர் சங்கம் வரவேற்பு:
இந்த அறிவிப்பு குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் கூறுகையில், பொள்ளாச்சியில் அரசினர்கலைக்கல்லூரி அமைப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம், சமத்தூர் இராம ஐயங்கார் நகரமன்ற மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும், குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும்.

மேலும், இக்கல்லூரிக்கு வெளியூரிலிருந்து வருகின்ற மாணவர்களும் தங்கி பயில ஏதுவாக விடுதி வசதியினையும் உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என வாலிபர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Leave A Reply