ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் , மாநில அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் 4.12 ஹெக்டேர் நிலத்தில் அமைச்சரும் , பாஜக தலைவருமான பிரிஜிமோகன் அகர்வாலின் மனைவி சரிதா அகர்வால் விடுதி ஒன்றை கட்டி வருகிறார். ஆனால் இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜகால்கி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விஷ்ணு ராம் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு சொந்தமான 4.12 ஹெக்டேர் நிலத்தை 1994 ம் ஆண்டு மார்ச் 2,அன்று நீர்வளத்துறைக்கு தானமாக வழங்கியுள்ளனர். இது அரசு பதிவேடுகளில் பதிவாகியுள்ளது.

பின்னர் மே 2,1994 அன்று உள்துறை அமைச்சகம் இந்த இடத்தை பெயர் மாற்ற அனுமதியளித்தது. தானமாக வழங்கப்பட்ட நிலம் வனப்பகுதிக்கு உட்பட்ட நிலத்தில் இருப்பதால்,  அங்கு காடு வளர்க்கவும், கால்நடை பராமரிப்பு அகழிகள் அமைக்கவும் மத்திய அமைச்சகம் ரூ.22.90 லட்சம் ஒதுக்கீடு செய்தது. பின்னர் டிசம்பர் 17,2003 அன்று நிலத்தை பெயர்மாற்றம் செய்ய இறுதி அனுமதி அளித்தது.

அரசுக்கு சொந்தமான இந்த 4.12 ஹெக்டேர் நிலத்தில் , சத்தீஸ்கர் மாநில அமைச்சரும் , பாஜக தலைவருமான பிரிஜிமோகன் அகர்வாலின் மனைவி சரிதா அகர்வால் , அவரது மகன் அபிஷேக் அகர்வால் உடன் இணைந்து விடுதி ஒன்றை கட்டி வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் மகாசாமுந்த் மாவட்டம் சிர்பூர் அருகே ஷியாம் வாட்டிக்கா என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் இந்த விடுதி அரசால் சுற்றுல்லாத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.

ஆனால்  நிலப் பதிவேடுகளில் உள்ள தகவல் படி, செப்டம்பர் 12,2009 அன்று ரூ.5,30,600-க்கு சரிதா அகர்வால், இந்த 4.12 ஹெக்டேர் நிலத்தை வாங்கியுள்ளார் என உள்ளது.

1990 ஆம் ஆண்டு ராய்ப்பூரில் எம்.எல்.ஏ-வாக இருந்த பிரிஜிமோகன் தற்போது வேளாண்மை , நீர்வளத் துறை  , சமய நம்பிக்கைகள் மற்றும் மானியங்கள் அமைச்சராக உள்ளார். சரிதா வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை வாங்கும் போது அவர் பள்ளிக்கல்வி, பொதுப்பணித்துறை, நாடாளுமன்ற அலுவல்கள், சுற்றுல்லா மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்தார்.

2013ம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பிரிஜிமோகன் மனுதாக்கல் செய்யும் போது  இந்த 4.12 ஹெக்டேர் நிலம் தனது மனைவி சரிதா பெயரில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அப்போது நிலம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தெளிவான விவரங்கள் அரசு பதிவேடுகளில் இல்லாததால், சரிதா அகர்வால் நிலத்தை வாங்கும் போது அது நிலத்தின் உரிமையாளர் விஷ்ணு ராம் பெயரில் தான் இருந்தது என மாவட்ட ஆட்சியர் , காவல் ஆணையர், வனத்துறையினர் என அனைத்து அரசு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.

மார்ச் 2015 ஆண்டு , மகாசாமுந்த் மாவட்டத்தை சேர்ந்த லலித் சந்திரநாகு என்பவர், நிலம் அரசுக்கு கைமாற்றப்பட்டது குறித்து அரசு பதிவேடுகளில் எந்த தகவலும் இல்லை என மாவட்ட ஆட்சியர் உமேஷ் குமார் அகர்வால் மற்றும் ராய்ப்பூர் ஆணையாளர் ஆகியோருக்கு  கடிதம் அனுப்பினார்.

பின்னர் ஆகஸ்ட் 2016, இரண்டாவது முறையாக லலித் சந்திரநாகு இது குறித்து புகார் அளித்தார். இதை தொடர்ந்து 4 மாதங்களுக்கு பின் டிசம்பர் 2, 2016 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது.

கடிதத்தில்,   மோடிஜி , சில செல்வாக்கு மிக்க மக்கள் சட்டவிரோதமாக அரசுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றியுள்ளனர். அரசுக்கு சொந்தமான நிலத்தை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் விநியோகிக்க முடியாது என சட்டம் உள்ளது. ஆனால் அது போன்ற எந்த விதிமுறையும் இங்கு பின்பற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

டிசம்பர் 26 அன்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த கடிதம் சத்தீஸ்கரின் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் புகார் அளித்தவரின் அடையாளங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மகாசாமுந்த் மாவட்ட ஆட்சியருக்கு ஜனவரி 13,2017 அன்று கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு மார்ச் 16,2017 அன்று பதிலளித்த மகாசாமுந்த் மாவட்ட ஆட்சியர் , இந்த நிலம் அரசுக்கு தானமாக கொடுக்கப்பட்டது. ஆனால் பெயர் மாற்றம் குறித்து பதிவேடுகளில் தெளிவாக தகவல்கள் இல்லாததால், நிலம் அதன் உரிமையாளரான விஷ்ணு ராம் பெயரில் தான் உள்ளது என பதில் அளித்துள்ளார்.

விற்கப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது என ஒவ்வொரு அரசாங்க நிறுவனமும் வலியுறுத்தும் நிலையில், இது தொடர்பாக வன மற்றும் வருவாய் மற்றும் நீர்வள அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என ஏப்ரல் 13 அன்று காவல்துறை ஆணையாளர்,  மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பதிவேடுகளில் நில உரிமையாளர் பெயரை மாற்ற கோரி வன துறையின் சார்பாக நவம்பர் 2016 முதல் இரண்டு முறை நிர்வளத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு பதிலளித்த நீர்வளத்துறை, மகாசாமுந்த் வன அதிகாரியிடம் லலித் சந்திரநாகு அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் , இந்த 4.12 ஹெக்டேர் நிலம் அமைச்சர் பிரிஜிமோகன் அகர்வால் மனைவி சரிதா அகர்வாலுக்கு விற்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 22,2016 வனத்துறையால் கடிதம் அனுப்பப்பட்ட போது பிரிஜிமோகன் அகர்வால் நீர்வளத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 30, 2017 அன்று இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீண்டும் வன மற்றும் நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இதன் அறிக்கையை சத்தீஸ்கரின் பொருளாதார குற்றச்சாட்டு ஆணையம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: