குஜராத்தில் குடிக்கும் தண்ணீருக்கான ஏற்பாடுகளில் முக்கியமானவை சர்தார் சரோவர் கால்வாயும், மஹி குழாய்களும் ஆகும். அதன் ஒருபகுதி தான் கட்ச் பகுதிக்கான குடிநீர் குழாய்கள் திட்டமும் ஆகும்.

1985ல் ராஜீவ் காந்தி பிரதமாராய் இருந்தபோது ஒரு தொழில்நுட்பக் குழுவை குஜராத்திற்கு அனுப்பி, ஆராய்ந்து, இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

படிப்படியாக நர்மதா நதியின் தண்ணீர் குஜராத்தின் கிராமப்புறங்களுக்கு, முக்கிய பகுதிகளுக்கும் கிடைத்துக்கொண்டு வருகிறது. மார்ச் 1999ல் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, வாஜ்பாய் அமைச்சரவையில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பாபகவுடா பட்டீல், கட்ச் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் இந்த திட்டம் பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

2001 அக்டோபரில் முதலமைச்சராகிறார் மோடி.

2003ம் வருடம் மார்ச் 18ம் தேதி கட்ச் பகுதிக்கும் தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த நாளின் கொண்டாட்டத்தின்போது மோடி இந்த திட்டத்தை துவக்கி வைத்த மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியை மிகவும் பாராட்டுகிறார்.

இவையெல்லாம் 1985 – 2003 வரையிலான இந்த குடிநீர்த் திட்டத்தின் வரலாறு.

பத்து வருடம் கழித்து, பாஜவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுகிறார். அதைத் தொடர்ந்து 2013 செப்டம்பர் 15ல் ரேவரியில் நடந்த பெரும் கூட்டத்தில் மோடி அவிழ்த்து விட்ட புளுகைப் பாருங்கள்.

”சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும், நம் சிப்பாய்களுக்கு ஓட்டகங்கள் சுமந்து தண்ணீர் கொடுக்கும் நிலைமையே இருக்கிறது. நான் சிப்பாய்கள் இருக்கும் இடம் சென்று அவர்களது படும் வேதனையை என் கண்களால் பார்த்தேன். நண்பர்களே! நான் கிழக்கு குஜராத்திலிருந்து மேற்கு குஜராத் அருகே இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கு 700 கி/மீ தொலைவுக்கு குழாய்களை பதிக்கச் செய்து, நர்மதா நதியின் தூய்மையான தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். எல்லையில் நிற்கும் நம் இந்திய சிப்பாய்கள் மீதான மரியாதையாலும், அன்பாலும் இதனை நான் செய்தேன்.”

(தொடரும்)

Mathava Raj

Leave a Reply

You must be logged in to post a comment.