சென்னை,
தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜூலை 21 முதல் 31 வரை 3வது மாபெரும் சென்னை புத்தகத் திருவிழா – ஜூலை 2017 நடைபெற உள்ளது.
இதுகுறித்து பதிப்பாளர் ஆர்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில் தமிழ்ப் பதிப்புலகம் மிகவும் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி இப்போது வாசகர்களை மட்டுமே நம்பியுள்ளது. இதனை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறோம். 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இந்தியா முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. கோடிக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இதன் துவக்க நிகழ்ச்சி ஜூலை 21ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் புத்தகத் திருவிழாவையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இணைந்து ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி ஜூலை 18ம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து குழந்தை எழுத்தாளர் டிம்முரே மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை ஒரே நேரத்தில் மாணவர்கள் வாசிக்க உள்ளனர். ஜூலை 20ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்கள் பங்கேற்று ‘ஆணியாய் அறையப்படும் கல்வியை விதைகளாய் தூவுவது எப்படி?’ என்ற தலைப்பில் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஓவியர் விஸ்வம் தலைமையில் தமிழகத்தின் முக்கிய ஓவியர்கள் இதில் பங்கு கொள்கின்றனர்.
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பள்ளிகளில் திறனறிதல் போட்டி அந்தந்தப் பள்ளிகளில் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஜூலை 22ஆம் தேதி காலை 9 மணிக்கு 12 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் வரைதல் நிகழ்ச்சி புத்தகக் கண்காட்சி அரங்கில் (ஒய்எம்சிஏ ராயப்பேட்டை) நடைபெற உள்ளது.
புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் மூன்று எழுத்தாளர்கள் என 35க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்கும் ‘எழுத்தாளர் முற்றம்’ நிகழ்ச்சி, எழுத்தாளர்களுடன் வாசகர்கள் அவர்களது படைப்புகள் குறித்து உரையாடும் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் முருகவேல், ஆதவன் தீட்சண்யா, நாகார்ஜூனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, ச.சுப்பாராவ், இரா.முருகன், மனுஷி, முபீன் சாதிகா, ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக, கவிதை வாசித்தல், ‘மாகன் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு’ சிறப்புக் கருத்தரங்கம், சினிமா துறை பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘சினிமா 100’, ‘மாமேதை மார்க்ஸ் 200’ கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. மேலும் மாலை 4 மணி முதல் சென்னை நூலகங்கள், சிறுவர் இலக்கியம், தாளிணிமொழி சிக்கல்கள், பெண்களும் அதிகாரமும் சுற்றுச் சூழலும் எழுத்தும், சட்டமும் மக்களும் என பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன. ஜூலை 22 அன்று மாலை நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு தமிழகத்தில் நீண்டகாலம் பதிப்புத் துறையில் பணியாற்றிய மூத்த பதிப்பாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி, மருத்துவத்துறை சார்ந்த 200க்கும் மேற்பட்ட ஆங்கில மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்து சாதனை படைத்த மருத்துவர் முத்துச்செல்லக்குமாரை பாராட்டுகிறார்.
நிறைவு நாளன்று கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை தொகுப்பு வரலாறு, மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் என 10 பிரிவுகளில் 2016 – 2017இல் வெளிவந்த சிறந்த 10 நூல்களுக்கு விருது வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சந்திப்பின் போது சுப்பிரமணியம் (டைகர் புக்ஸ்), வெங்கட் (அறிவாலய பதிப்பகம்), நாகராஜ் (பாரதி புத்தகாலயம்), சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம், சுரேஷ் (நக்கீரன்) உடனிருந்தனர்.
வாசகர்கள் நண்பர்கள் என்ற வகையில் அனுமதி இலவசம் நுழைவுக் கட்டணம் இல்லை, குலுக்கல் முறையில் தினமும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசளிப்பு, மூத்த வாசகர்கள் புதிய வாசகர்களுக்கு வழிகாட்ட ஏற்பாடு, சென்னை குறித்த புகைப்படக் கண்காட்சி, அனைத்து நூல்களுக்கும் 10 விழுக்காடு கழிவு வழங்கப்படுவது உள்ளிட்டவை சிறப்பம்சமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.