அகமதாபாத்,

ஜவுளி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்களில்  ஜவுளி வர்த்தகர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜவுளி பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஜவுளி வர்த்தகர்கள் இன்று அகமதாபாத் மற்றும் சுரத் நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டத்திற்கு முன்னதாக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறிய ஜவுளி வர்த்தகர்கள் , ஜூலை 01 ஆம் தேதி அன்று அமல்படுத்தப்பட்ட ஜவுளி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியால் இது வரை ரூ.6,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.  இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் லூதியானா மற்றும் ஜெய்பூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான வர்த்தக அமைப்பினர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

அகமதாபாத் ஜவுளி வர்த்தக சங்கத்தின் தலைவர் கவுரங் பகத் கூறுகையில் , ஜி.எஸ்.டி வரி தொடர்பான கருத்தரங்கில் பட்டய கணக்காளர்களுக்கு வெவ்வேறு பதிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி குறித்த முழுமையான விபரங்கள் வியாபாரிகளோ அல்லது அரசு அதிகாரிகளோ புரிந்து கொள்ள முடியாத படி மிகவும் குழப்பமானதாக உள்ளது.  என்றார்.

குஜராத் துணை முதலமைச்சர் நிதின்பாய் பட்டேல் , ஜவுளி வர்த்தகர்களுடன் அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஜி.எஸ்.டி வரி வர்த்தகர்களுக்கு எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும் என நாங்கள் அவர்களுக்கு புரிய வைக்க முயன்று வருகிறோம் என்றார்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஜெய்பூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் , இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பால் குடிசை தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்றார்.

விவசாயத்தை சார்ந்திருக்கும் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி வரி பெரும் சுமையாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப்பை சேர்ந்தவர் தெரிவித்தார்.

ஜவுளி வியாபாரிகளின் இந்த போராட்டம் காரணமாக அகமதாபாத் மற்றும் சுரத் நகரங்களில் உள்ள அனைத்து ஜவுளி சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: