பெரம்பலூர்;
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள காமராஜர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-
தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பள்ளிகளை உருவாக்கிய பெருமை, பெருந்தலைவர் காமராஜரையே சாரும். இன்று தமிழகத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பெருகி இருப்பதற்கும், கடைக்கோடி மக்களும் கல்வி பெற முடியும் என்ற சூழல் அமைவதற்கும் காமராஜரின் பங்களிப்புதான் காரணம்.

ஆனால் இன்றைய நிலையில் தனியார் பள்ளிகள் பெருகி அதன் ஆதிக்கம் மேலாங்கி இருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகள் ஆங்காங்கே மூடப்பட்டு வரும் அவலமும் நிகழ்ந்து வருகின்றது. இது காமராஜருக்கு நாம் இழைக்கும் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே, அரசுப் பள்ளிகளை மூடும் போக்கை அரசு கைவிட வேண்டும். போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட வேண்டும். பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதை விட தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, சென்னை எண்ணூர் தொழிற்சாலை மற்றும் சேலம் உருக்காலை ஆகியவற்றை மத்திய அரசு தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவது அபாயகரமானது. இந்திய தொழிற்துறை அனைத்தையும் கார்ப்பரேட் கம்பெனியின் கைவசம் வழங்கும் மத்திய அரசுக்கு விசிக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: