புதுதில்லி;
விஜய் மல்லையாவை, 2018-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையாவை நேரில் ஆஜர்படுத்தினால் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல், மல்லையா இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார். மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, மல்லையா மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும், இந்த வழக்கு டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசுத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மல்லையா இல்லாமல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது என்றும், மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நாளில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 2018-ஆம் ஆண்டு ஜனவரிக்குள் மல்லையாவை ஆஜர்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.