புதுதில்லி;
இரட்டை இலைச் சின்னத்திற்காக, தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில், தில்லி போலீசார் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில், அதில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதிமுக மூன்றாக பிளவுபட்டுள்ளதால், அக்கட்சியின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ தேர்தல் ஆணையத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘இரட்டை இலை’ சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுக அணிக்கு ஒதுக்கீடு செய்வதற்காக, டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருமாத நீதிமன்றக் காவலுக்குப் பின், டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தில்லி காவல்துறையினர் வெள்ளிக்கிழமையன்று தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அதில் டிடிவி தினகரனின் பெயர் இல்லை.
அவரது நண்பர் பெயரும் இல்லை. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.போதிய ஆதாரம் இல்லாததன் காரணமாகவே அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இது டிடிவி தினகரன் வழக்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இதனை தில்லி காவல்துறை இணை ஆணையர் பிரவீன் ரஞ்சன் மறுத்துள்ளார். டிடிவி தினகரன் குற்றமற்றவர் என நாங்கள் கூறவில்லை என்று தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கில் இன்னமும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தினகரன் உள்ளிட்ட 4 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.