சென்னை,
அரசுப் பள்ளிகளுக்கு முட்டை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கு  தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த ஹடெக் பிஷ்சரிஸ் டிரேடிங் கம்பெனியின் இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும்  பள்ளிகளுக்கு ஆகஸ்டு 2017 முதல் ஜூலை 2018 வரை 52 லட்சம் அக்மார்க் முத்திரைகளை கொண்ட   முட்டைகள்  கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பாணை கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியிட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தப் புள்ளியில் பங்கு கொள்ள  மத்திய அரசின் வர்த்தக மற்றும் கண்காணிப்புத் துறையின் சான்றிதழ், ஐஎஸ்ஒ 2000:2005 சான்றிதழ், பிஐஎஸ் உரிமம், எப்எஸ்எஸ்ஏ உள்ளிட்ட 17 வகையான சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகளால்  பல ஒப்பந்ததாரர்கள் பங்குகொள்ள முடியாத நிலை உள்ளது. சில   குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும் வகையில்  இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே எனது ஒப்பந்தப் புள்ளியை ஏற்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்க விதிக்கப்பட்டுள்ள 17 நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை செவ்வாயன்று(ஜூலை 11)  விசாரித்த நீதிபதி துரைசாமி, இதுதொடர்பாக தமிழக அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். மேலும் இந்த ஒப்பந்த நடைமுறைகள், வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: