பெய்ஜிங்;
இந்தியா, சீனா, பூடான் எல்லையில் உள்ளது ‘டோக்லாம் பீடபூமி’. இந்தப் பகுதியிலுள்ள சுமார் 30 சதவிகித பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் சீனா, பூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை இருந்து வருகிறது.
அண்மைக் காலமாக, ‘டோக்லாம் பீடபூமி’ பகுதியிலிருந்து இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லை வரை சாலை அமைக்க சீனா முயற்சித்து வருகிறது.
இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, டோக்லாம் பகுதி பூடானுக்கு சொந்தம் என்று அந்த நாட்டுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், டோக்லாம் பகுதிக்கு தனது ராணுவத்தையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த சீனா, இந்திய ராணுவம் உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது. சிக்கிம் எல்லையையொட்டிய பகுதியில் இந்திய ராணுவத்தின் மூன்று பதுங்கு குழிகளையும் சீனா தாக்கி அழித்தது. இது இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஜெர்மனியில் ஜி-20 நாடுகள் மாநாட்டின்போது, இந்திய பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும் நேரடியாக சந்தித்து கைகுலுக்கி, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதைத் தொடர்ந்து, போர் பதற்றம் தணிந்தது.
எனினும், எல்லையில் நிலைமை சீராகவில்லை. இருநாட்டு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ராணுவம் சிக்கிம் எல்லையில் நிரந்தர கூடாரங்களையும் அமைக்கத் துவங்கியிருக்கிறது.
இதனிடையே, சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. சீன மேற்கு பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வி மைய இயக்குநர் லாங் ஜிங்சுன் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
அதில், பூடான் நாடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே டோக்லாம் பகுதிக்குச் சென்றதாக இந்தியா கூறியிருப்பதை லாங் ஜிங்சுன் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார்.“ டோக்லம் பகுதியில் சீனப் படைகள் சாலை அமைப்பதை இந்தியப்படைகள் தடுத்துள்ளன; பூடான் நாடு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இதைச் செய்ததாக இந்தியா கூறுகிறது; இந்தியாவின் இந்த லாஜிக்கின்படி பூடானுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சையாகி இருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா ராணுவத்தை நிறுத்தலாம் என்றால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள், பாகிஸ்தான் கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் சீனாவும் தன்னுடைய ராணுவத்தை அனுப்பலாம்தானே” என்று லாங் ஜிங்சுன் கேட்டுள்ளார்.
இந்தியா பூடானுக்கு உதவவில்லை; மாறாக அந்த நாட்டுக்கு உதவி செய்யும் போர்வையில் பூடானை இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது என்றும் ஜிங்சுன் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.