‘‘உலக அளவில் நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கியிருக்கும் வீரர் ஸ்ரீகாந்த் நம்மாழ்வார் கிடாம்பி. 24 வயதாகும் அவர் பிறந்தது ஆந்திர மாநிலம் குண்டூர். பேட்மிண்டன் வாழ்க்கையை அவர் துவக்கியது விசாகப்பட்டினம்’’ பிறகு கம்மம் சென்றார். எட்டு வயதில் பேட்மிண்டன் ராக்கெட்டை அவரது கையில் திணித்த தந்தை கிருஷ்ணா, மகனின் திறமையை பார்த்ததும் சிறப்பான எதிர்காலம் இருப்பதை கண்டுபிடித்தார். மூத்த மகன் நந்தகுமார் மாவட்ட அளவில் பேட்மிண்டனில் விளையாடி வந்ததால், அண்ணனைப்போல சாதிக்க வேண்டும் எனஆசைப்பட்டார் ஸ்ரீகாந்த்.

மகனின் ஆசைக்கு தடைபோட விரும்பாத தந்தை, கோபிசந்த் போல் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியுமா? எனக் கேட்க, தயக்கமே இல்லாமல் முடியும் என 8 வயதில் சொன்ன ஸ்ரீகாந்த், 24 வயதில் அதை நிரூபித்தும் காட்டினார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோபிசந்த் இங்கிலாந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதால் அம்மாநிலத்தில் பேட்மிண்டன் மீதான ஈர்ப்பும் அதிகமானது. பேட்மிண்டன் போட்டிக்கு ஓய்வு கொடுத்த கோபிசந்த், தன்னைப் போல் பலரும் வரவேண்டும் என்று பயிற்சியாளரானார். மகனின் தன்னம்பிக்கை, மன உறுதியைப் பார்த்ததும் விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திர விளையாட்டு ஆணையத்தில் சேர்த்தார். ஏற்கெனவே, மூத்த மகன் நந்தகோபாலும் அங்குதான் பயிற்சி எடுத்து வந்தார். மகன்கள் இருவரும் சென்றுவிட்டதால் அந்தப் பிரிவை தாங்கமுடியாத தாய் ராதா முந்தா, எப்படியும் ஸ்ரீகாந்த்தை வீட்டிற்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று நினைத்தார்.

ஆனால், முடியவில்லை. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்கள் ஹைதராபாத்திலுள்ள கோபிசந்தின் அகாடமியில் இணைந்தனர். தனது சகோதரர் நந்தகோபாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவுகளில் கால் பதித்தது மட்டுமின்றி ஸ்ரீகாந்த் உள்ளூரில் தேசிய அளவிலும் முத்திரை பதித்தார். பேட்மிண்டன் உலகில் இவர்களை ‘‘குண்டூர் சகோதரர்கள்’’ என அழைத்தனர். ஒரு கட்டத்திற்கு பிறகு, பயிற்சியாளரின் ஆலோசனைப்படி ஒற்றையர் பிரிவுக்கு மாறினார் ஸ்ரீகாந்த். 18 வயதில் காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த், 2012 ஆம் ஆண்டில் தேசிய சீனியர் போட்டியில் சகோதரர் நந்தகோபாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது பலரது புருவத்தை உயர வைத்தது. அண்ணன் நந்தகோபால் தேசியப் போட்டிகளோடு நின்றுவிட, ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 19 வயதில் உலக ஜூனியர் போட்டியில் விளையாடி தேசியக் கொடியை தாங்கிப்பிடித்தார்.

2016-இல் புதுவேகமெடுத்த ஸ்ரீகாந்த், ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும் தெற்காசிய விளையாட்டில் இரண்டு தங்கப் பதக்கமும் வென்று குவித்தார். ஒற்றையர் போட்டிகளில் வெற்றிப்பாதையில் சென்ற ஸ்ரீகாந்துக்கு இடையில் சறுக்கல் ஏற்பட்டது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது நிலைமை மிகவும் மோசமானது, தீவிர சிகிச்சைக்கு பிறகு, அதிலிருந்து மீண்டு வந்தார்.  2016இல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதியில் உலகின் முன்னணி வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் லீ டானிடம் தோல்வியடைந்ததால் பதக்க வாய்ப்பு பறிபோனது. ஆனாலும், அவர் துவண்டு போகவில்லை.  தனது பயிற்சியாளர் கோபிசந்திடம் ஆலோசனைபெற்று கடும் பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்து களம் இறங்கிய ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் ஓபனில் முன்பைக் காட்டிலும் அதிக ஆற்றலுடன் விளையாடினார். இறுதிப்போட்டியில் சளைக்காமல் போராடியும் சக வீரர் சாய் பிரசாந்திடம் நூலிழையில் கோப்பையை தவற விட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த சூப்பர் சீரிஸ் தொடரில் பேட்மிண்டன் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான லீ டானை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இந்த ஆண்டில் இந்தோனேசிய ஓபனில் ஜப்பான் வீரரை வீழ்த்தி பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த சூப்பர் சீரிஸ் போட்டியில் பேட்மிண்டன் ஜாம்பவானும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கை மண்ணை கவ்வ வைத்து சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் ஸ்ரீகாந்த்.  இரண்டு தொடர்களில் பட்டம் வென்று உச்சம் அடைந்துள்ள ஸ்ரீகாந்துக்கு மத்திய விளையாட்டுத்துறை சார்பில் தில்லியில் பாராட்டு விழா நடந்தது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், அடுத்த மாதம் 21 ஆம் தேதி முதல் 27 வரை உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்திலும் 100 சதவீத திறனை வெளிப்படுத்துவோம் என்றார்.

ஸ்ரீகாந்தின் ஆட்ட நுணுக்கத்தை எதிராளிகள் அவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்ள முடியாது. அந்த அளவுக்கு புதிய நுணுக்கங்களை கையாள்கிறார். இந்த திறமைகள்தான் அவர் வெற்றிகளைக் குவிக்க உதவுகிறது. உலக தர வரிசைப் பட்டிய லில் 240ஆவது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு முன்னேறினாலும் முதலிடத்தை பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார்.  இந்திய பேட்மிண்டன் உலகின் குருவை மிஞ்சிய இந்த சீடனின் கனவுகள் நிறைவேறட்டும்!

Leave a Reply

You must be logged in to post a comment.