போர்முனையில் முதல் வரிசையில் நிற்கும் வீரர்களைப் போன்றவர்கள் விவசாயிகள். அவர்கள் விழ ஆரம்பித்து விட்டால் ஆபத்து, வரிசையில் அடுத்து நிற்பவர்களுக்குத்தான். இப்போது கிட்டத்தட்ட தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது இதுதான். அனைத்து மக்களின் வயிற்றுக்கு உணவளிக்கும் உழவன் வாய்க்கரிசிக்குக்கூட வழியில்லாமல் மாண்டு போவதும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் – இறந்தது வறுமையால் அல்ல; குடும்பப் பிரச்சனையால் என பிரச்சனையை திசைமாற்றி செலுத்தியதன் காரணமாகக் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தும் அதிர்ச்சியாலும்மாண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் விஷயத்தில் அரசுகளுக்கு ஏன் இத்தனை அலட்சியம்? அவர்களுடைய பிரச்சனை நாட்டின் தலையாய பிரச்சனையாக பார்க்கப்படாததற்கு என்ன காரணம்? விவசாயிகளின் கடன்களுக்கு வானம் பொய்த்ததும், காவிரி நீர் தடுக்கப்பட்டதும், வறட்சி வாட்டி வதைத்ததும் தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய, ஒருவரை மாற்றி ஒருவர் கைகாட்டிக் கொண்டிருக்கும் இழி அரசியல் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தொடரப் போகிறது?

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக விவசாயிகள் தெருமுனையிலிருந்து தில்லி வரை போராடுகிறார்கள் அவர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைக்கமத்திய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை.

பார்வையாளரான அரசாங்கம்:
மழை எப்போதாவதுதான் வரும், புயல் எப்போதாவதுதான் வீசும், வெள்ளம் எப்போ
தாவதுதான் பெருக்கெடுக்கும் – அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அரசாங்கமே இயற்கையின் விதிகளை மீறி, விவசாய நிலங்களை கட்டிடங்களாக மாற்றிய செயல்களை மறந்துவிட முடியாது. ஆற்று மணலைகுத்தகைக்கு விட்டு நதித் தாயின் அடிவயிறு ரத்தக்களறியாகும் வரை மண்ணைச் சுரண்டிஎடுக்க அனுமதித்ததும், கிரானைட் கற்களுக்காக மலைகளையே மண் மேடாக்கவும், அனு
மதித்த அளவுக்கு மேலேயும் பாறைகளை வெட்டவும் விட்டுவிட்டு பார்வையாளர்களாக இருந்துவிட்ட அரசாங்கங்கள் தான் தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் பூமிப்பந்தின் மையப்புள்ளியை நோக்கி கீழிறங்கிடக் காரணம்.

விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்பது வரலாறு. உழவுக்கும் தொழிலுக்கும் உகந்ததைச்செய்ய தொழிலாளர்களோடும் விவசாயிகளோடும் அரசு ஊழியர்களும் கரம் கோர்த்து அரசாங்கங்களை நிர்ப்பந்திப்போம். இருக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாப்போம்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு ஆதரவாக நின்று போராடிய இயக்கமாகும். இந்த போராட்டங்களின் போது விவசாயிகள் சங்கத் தோழர்கள், இறந்துபோன விவசாயிகளின் வாரிசுகள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளதாக தெரிவித்தனர். கடன் தொல்லையால் இறந்து போன விவசாயிகளின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு கஷ்டப்படக்கூடாது என்பதுடன், அவர்களின்எதிர்காலம் பாடப்புத்தகங்களில் புதைந்து கிடப்பதால் அவர்களுக்கு உதவுவது தலையாயக் கடமை என்று அரசு ஊழியர் சங்கத்தின்மாநில செயற்குழு முடிவு செய்து அதற்கான நிதி உதவியை திரட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவித்து, இறந்துபோன விவசாயிகளின் குழந்தைகள் மட்டுமல்லாமல், கடன்தொல்லையால் அவதிப்படும் விவசாயிகளின் குழந்தைகளும் தடையின்றி கல்வி பயிலமுட்டுக்கட்டையாக இருக்கும் பொருளாதாரத் தடையை நீக்குவதென தீர்மானித்தோம்.

அதன்படி இதுவரை பத்து மாவட்டங்களிலிருந்து ரூ.2,72,244/- உண்டி வசூல் மூலம் திரட்டப்பட்டு அது உரியவர்களைப் போய்ச்சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இதற்கான நிதிதிரட்டப்படுகிறது. இந்த தொகை சிறிதெனினும் இதன்மூலம், நொடிந்துபோன விவசாயிகளது குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கு உண்டு. விவசாயிகளுக்கான ஆதரவு, நிதி திரட்டுவதோடு நின்றுபோகாமல், இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளும் ஏரிகளை தூர் வாருதல், கண்மாய்களை ஆழப்படுத்துதல், மரங்களை நடுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் அரசு ஊழியர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவுள்ளனர்.

நேசத்துடன் தேசத் தொண்டாற்ற அரசுஊழியர்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும், இளைஞர்களும் ஒன்றுபடுவோம். நமக்கான விடியல்களை நாமே உருவாக்குவோம்!
கட்டுரையாளர்: மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
E-mail : tngeags@gmail.com

Leave a Reply

You must be logged in to post a comment.