புதுதில்லி;
எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்திற்கு உதவ முடியாது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறியுள்ளார்.
இவ்வழக்கில் ஏற்கெனவே ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதால், நீதிமன்றத்திற்கும் சட்ட ஆலோசனை வழங்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் அணியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ரகசிய வாக்கெடுப்பின் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு, கடந்த புதன்கிழமையன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ‘மாஃபா’ கே.பாண்டியராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.
விசாரணையின் போது, நீதிபதி தீபக் மிஸ்ரா, ரகசிய வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவை விதிகளில் இடமிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கோபால் சுப்பிரமணியம், “ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதியில் இடமில்லாமல் இருக்கலாம்;ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை; ரகசிய வாக்கெடுப்பை நடத்த விதிமுறையில் எங்கும் தடை விதிக்கப்படவில்லை” என்றும் கூறினார்.
இதையடுத்து, வழக்கை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இவ்வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் சட்ட உதவி வழங்க இயலாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். ஏற்கெனவே, மனுதாரருக்கு ( ‘மாஃபா’ பாண்டியராஜனுக்கு) சட்ட ஆலோசனை வழங்கி வருவதால், உச்ச நீதிமன்றத்திற்கு சட்ட உதவி வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.