ஹைதராபாத்,
கர்னூல் அரசு மருத்துவமனையில் எலி பிடிக்க ஒரு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் கூலி வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள  அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட, ஒரு மாதமே ஆன குழந்தை எலி கடித்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தையடுத்து அரசு மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் எலிகளை பிடிக்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், கர்னூல் அரசு மருத்துவமனைகளில் எலி பிடிப்பதற்காக திருப்பதியை சேர்ந்த விஸ்வநாத் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார். 120 ஏக்கர் பரப்பளவில் 40 மருத்துவத் துறைகள் கொண்ட கர்னூல் மருத்துவமனையில் எலி பிடிப்பதற்காக மாதம் ரூ.5 லட்சம் என 12 மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக விஸ்வநாத்துக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட்டதாம். எலி பிடிக்கும் பணியில் 2 கண்காணிப்பாளர், 3 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி வரை 460 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும், ஒரு எலி பிடிக்க ரூ.13 ஆயிரம் செலவு செய்யப்பட்டதாகவும் கணக்கு காண்பிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இருந்தாலும், தொடர்ந்து மருத்துவமனையில் எலிகள் சுற்றித்திரிந்து நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, கர்னூல் மருத்துவமனை கண்காணிப்பாளர் வீராசாமி கூறுகையில், `மருத்துவமனையில் எலி பிடிப்பதற்கு மாதந்தோறும் ரூ.5 லட்சம் கூலி வழங்கப்படுகிறது. இதுவரை 460 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
எலி பிடிப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதால், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.