திருநெல்வேலி;
நெல்லை மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் காய்கறி சந்தைகளில் சின்னவெங்காயம் (உள்ளி) விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

உள்ளூரில் விளைச்சல் இல்லாததாலும், வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்துள்ளதாலும் கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் பயிரிடப்படும் காய்கனிகளில் சின்ன வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா ஆகியவை சின்ன வெங்காயம் விளைவிக்கும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் திருநெல்வேலி, ஈரோடு, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த வெங்காய உற்பத்தியில் தமிழகத்திலிருந்து மட்டும் 75 சதவீத பங்களிப்பு உள்ளது.

மே, ஜூன் மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் சின்ன வெங்காயம் சாகுபடிக்கு முக்கிய பருவங்களாகும். நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் சாகுபடி பரப்பு சரிந்துள்ளது. மே தொடங்கி ஜூலை வந்த பிறகும் வெங்காய சாகுபடி குறிப்பிடும்படியாக இல்லை.

இதன் காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சின்ன வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. மேலும், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்து போனதாலும் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.30-க்கு விற்பனையான சின்ன வெங்காயம், மார்ச் முதல் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இப்போது, கிலோ ரூ.120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் குன்றிய, தரம் குறைந்த மிகவும் சிறிய அளவிலான உள்ளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசின் உழவர் சந்தை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தினசரி சந்தைகளிலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.114, ரூ.112, ரூ.110 என விருப்பம்போல விலையுள்ளது. கேள்வி எழுப்பினால் ரகத்துக்கு தகுந்த விலை என்கின்றனர் வியாபாரிகள். இதேபோல, பூண்டு, பீன்ஸ், காரட், தக்காளி, இஞ்சி, அவரை ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

உழவர் சந்தையில் காய்கனிகள் விலை விவரம் (கிலோவுக்கு):                                                                                                                             கத்தரிக்காய்- ரூ.22, வெண்டைக்காய் – ரூ.40, தக்காளி – ரூ.64, புடலங்காய் – ரூ.24, அவரைக்காய் – ரூ.65, பீர்க்கங்காய்- ரூ.34, கொத்தவரை -ரூ.35, பாகற்காய்- ரூ.65, முருங்கைக்காய்- ரூ.48, மாங்காய் -ரூ.24, பச்சை மிளகாய்- ரூ.56, வெள்ளரிக்காய் -ரூ.34, சுரைக்காய் -ரூ.14, தடியங்காய் -ரூ.24, பூசணி- ரூ.12, வாழைக்காய் -ரூ.35, எலுமிச்சை -ரூ.16, நார்த்தங்காய் -ரூ.24, முள்ளங்கி -ரூ.20, பல்லாரி -ரூ.17, கொத்தமல்லி – ரூ.100, புதினா -ரூ.46, கறிவேப்பிலை – ரூ.32, இஞ்சி- ரூ.54, வாழைத்தண்டு – ரூ.10, வாழைப்பூ – ரூ.10, சேம்பு – ரூ.35, சேனைக்கிழங்கு – ரூ.48, மரவள்ளி – ரூ.18, தேங்காய் – ரூ.32, கேரட் – ரூ.66, உருளைக் கிழங்கு – ரூ.18, முட்டைக்கோஸ் – ரூ.18, சௌசௌ – ரூ.27, பீட்ரூட்- ரூ.30, நூல்கோல் – ரூ.28, முருங்கை பீன்ஸ்- ரூ.56, ரிங் பீன்ஸ் – ரூ.65, காலிபிளவர் – ரூ.45, குடைமிளகாய் – ரூ.48 ஆக உள்ளது. தண்டுக் கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை, பசலைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை, பாலாக்கீரை, முளைக்கீரை, ஆரைக்கீரை, வல்லாரைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள் கட்டு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: