கோவை, ஜூலை 5-
கோவை மாவட்டத்தில் விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட சுமார் ஒரு லட்சம் மரங்களுக்கு  ஈடாக மீண்டும் மரக்கன்றுகள் நடக்கோரி விவசாயிகள் மரக்கன்றுகளுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் தற்போது வரையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை விரிவாகத்திற்காக சுமார் ஒரு லட்சம் மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டுள்ளது.

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்
ளது. மாவட்ட வன அலுவலர் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 55,440 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெட்டப்பட்ட மரங்களுக்கு திலாக 1,518 மரக் கன்றுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெட்டப்பட்ட மரங்கள் எவ்வளவுத் தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும். அதிக மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் வெப்ப சலனமுள்ள பகுதியாக மாறி வருகிறது. புதிய மரங்கள் வைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் இடம் இல்லை. எனவே மாவட்ட வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வனத்துறை பூமிதான நிலங்கள், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நிர் வரத்து உள்ள குளம், குட்டைகளுக்கு வரும் நீர் வழித் தடங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாலும், கழிவுகளை நீர் வழிப்பாதையில் கொட்டுவதாலும் குளம்,குட்டைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்து வருகிறது. எனவே நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டலம் வாரியாக அலுவலர் நியமனம் செய்து அறிக்கை பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.