திருப்பூர்,
திருப்பூரில் மாடு விற்பனைத் தரகரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற அனுமன் சேனா நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாட்டில் முழுவதும் இறைச்சிக்காக மாடு வெட்ட தடையென்று மத்திய அரசு அறிவிப்புக்கு எதிர்ப்பு  தொடர்ந்து பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே பசுக் குண்டர்கள் மாடு வளர்ப்பவர்களை கடுமையாக தாக்கி கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பழனியருகே மாடுகளை ஏற்றி சென்றவர்களை தடுத்து பசு குண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த வன்முறையில் காவல் துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பூரில் தாராபுரம் சாலை, வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி.  மாடு விற்பனைத் தரகர் தொழில் ஈடுபட்டுள்ளர். முத்துசாமி திங்கள்கிழமைகளில் தென்னம்பாளையத்தில் நடைபெறும் மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்கிச் செல்வார். இந்நிலையில், வழக்கம்போல மாட்டுச் சந்தையில் திங்கள்கிழமை மாடுகளை விலைக்கு வாங்கி வாகனங்களில் ஏற்றியுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தனது மொபைல் போனில்  மாடுகள் ஏற்றப்பட்ட முத்துசாமியின் வாகனத்தை, வாகன எண் தெரியுமாறு விடியோ எடுத்துள்ளார்.

பின்னர், மாடுகளைச் சித்ரவதை செய்வதாகக் கூறி, காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்காமல் இருக்க தனக்குப் பணம் தரவேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, அங்கிருந்த மற்ற தரகர்களின் உதவியுடன், அவரைப் பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், அவர் திருப்பூர், திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் (32) என்பதும், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) அமைப்பின் மாநகர நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.