திருப்பூர், ஜூன் 30 –
மின்துறையில் வெற்று அறிவிப்புகளை மாநில மின்துறை அமைச்சர் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விண்ணப்பித்து மாதக்கணக்கில் மின் மீட்டர் கிடைக்காததால் பல குடும்பங்கள் இருளில் தவித்து வருகின்றன என்று மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.
ஊத்துக்குளி துணை மின் நிலையம் முன்பாக வெள்ளியன்று காலை சிஐடியு சங்கக் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் செங்கொடியை ஏற்றி வைத்து எஸ்.எஸ்.சுப்பிரமணியம் மேலும் கூறியதாவது: மின் இணைப்பு கேட்போருக்கு விண்ணப்பித்த அடுத்த நாளே மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

ஆனால் அவர் அறிவித்ததில் இருந்துகூட ஏற்கெனவே விண்ணப்பித்து காத்திருப்போருக்குக்கூட தற்போதுவரை மின் மீட்டர் வழங்கப்படவில்லை. மின் இணைப்பும் தரப்படவில்லை. இதனால் பல குடும்பங்கள் இருளில் தவித்து வருகின்றன. எனவே வெற்று அறிவிப்புகளை விட்டு மக்களுக்கு உரிய மின் இணைப்புகளை முறையாக வழங்க தமிழக அரசும், மின் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 19 அன்று மின்சார மானியக் கோரிக்கையில் மின்சார வாரியத்தில் குறைவான காலியிடங்கள் மட்டுமே இருப்பதாக அமைச்சரே தவறான தகவல் கொடுத்திருக்கிறார். களப்பணியாளர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை.

இவற்றைக் கண்டித்தும் மின்துறை களப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும் வரும் ஜூலை 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எஸ்.எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.முன்னதாக கொடியேற்று நிகழ்ச்சிக்கு மாநிலத் துணைத் தலைவர் டி.கோபாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர் பி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சக்திவேல், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: