கோவை, ஜூன் 30-
நொய்யல் ஆற்றில் தொடரும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பி.இளங்கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்று பேசுகையில், நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதால் நொய்யல் ஆற்றின் அகலம் தொடர்ந்து சுருங்கி வருகிறது. தற்சமயம் பருவமழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம், மற்றம் குடிநீர் ஆதார குளங்களுக்கு தண்ணீர் வராத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தனியார் காகித தொழிற்சாலை கட்டட விரிவாக்கப்பணி மேற்கொண்டு வருகிறது. இக்கட்டட விரிவாக்கப் பணி யானைகள் வழித்தடத்தில் மேற்கொள்ளப்படுவதால் மனித – விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இத்தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சுக்கழிவுகள் வனப்பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் காற்று மாசுபடுவதுடன், வனவிலங்குகளும் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி கிராமம், வெள்ளலூர் கிராமம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் உள்ள கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் சார்ந்த துறைகளுக்கு 60 லட்சம் கோடிக்கு அதிகமான வரிச்சலுகையும், பெரும் முதலாளிகளுக்கு வாராக்கடன் என்கிற பெயரில் பல லட்சம் கோடி தள்ளுபடியும் செய்துள்ள மத்திய அரசு விவசாயிகள் கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: