ஈரோடு, ஜூன் 30-
மானியங்கள் இல்லை, மாறாக உரத்திற்கு 15 சதவிகித வரி விதிப்பதா என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டு வருகிறது. இதில் குளத்தில் உள்ள வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு, அனுமதியுடன் விவசாயிகள் எடுத்து செல்கிறார்கள்.

அதேநேரம் சில தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் விற்பனைக்காக எடுத்து செல்கிறார்கள். இதனை தடுக்க பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.விவசாயத்திற்காக வாங்கும் உரமானது, உர கடைகளில் பி.எஸ்.ஒ கருவி மூலம் முன்கூட்டியே பதிவு செய்துதான் வாங்க முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் சாதாரணமாக வாங்கும் விலையை விட, அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். எனவே இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உரத்திற்கு 15 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அதிக
மானது. இதனை குறைக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும், விவசாயிகள் கோழி, ஆடு, மாடு வளர்ப்பிற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அத்தியாவசிய தேவைகளுக்காக விவசாயிகள் படுன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மின்துறை அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள். மேலும் தனி இணைப்பு வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுதொடர்பாக உரிய தீர்வு காண வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதல் வழங்கப்படுகிறது. இதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் போது அசல் சான்றிதல் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதனை சரி செய்ய வேண்டும். அல்லது மீண்டும் சான்றிதல் வழங்க வேண்டும். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் ஒய்வூதியர்கள் வேலை செய்யக்கூடாது என கூறுகிறார்கள். இதனை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி கணக்கம்பாளையம் அருகே பகவதி நகரில் கடந்த 2006 ஆண்டு சுமார் 9 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது தடுப்பணையின் ஒரு பகுதியில் உள்ள கரைகள் சேதப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் சேதமும், வனவிலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். காளிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறப்பு எப்போது? இதேபோல், காளிங்கராயன் பாசன பகுதிகளில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், இதுவரை திறக்கவில்லை. இதனால் தென்னை மரங்கள் காய்ந்து உள்ளது. மேலும் விதை மஞ்சள் கருகும் நிலையில் உள்ளது.

இதனால் 15 நாட்கள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சர்க்கரை ஆலைகளில் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் பணம் தரவில்லை. இதுதொடர்பாக கடந்த கூட்டத்திலும் ஆட்சியரிடம் தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. அதேநேரம் ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இதுவரை கொடுக்கவில்லை. இதேபோல், பால் கூட்டுறவு
சங்கங்களில் சுமார் ரூ.24 கோடி பழைய பாக்கி தர வேண்டியது உள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் ரூ.4 கோடி கொடுத்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக பால் வாங்குவதில்லை. காரணம் கேட்டால் ஒரே வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்
என அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள்.

இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை இதேபோல், மாட்டுச் சந்தையில் மாடுகள் விற்பனையில் இந்து மக்கள் கட்சி போன்ற சில அமைப்புகள் இடையூறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இது போன்ற தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆகவே, இதன் மீது ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் 3 மஞ்சள் விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இது ஒரே இடத்தில் இருத்தால் விவசாயிகளுக்கு நல்லது, விற்பனையும் அதிகமாகும். மேலும், கொடுமுடி பகுதியில் மாடுகள் வறட்சியால் தீவனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் தீவனம் கொடுப்பதாக கூறினார்கள். எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் 3500 ரூபாய்க்கு ஒரு லோடு தக்கை வாங்கி, உப்புத் தண்ணீர் தூற்றி, அதை மாடுகளுக்கு கொடுத்து வளர்த்தி வருகிறோம். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு குமலன் பரப்பு அருகில் பாலீத்தின் பைகளில் மறு சுழற்சி செய்து வரும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வரும் புகையால் மாசுபாடு அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.