மனிதனின் முதல் எதிரி எலி தான். அநேகமாக ஆறு எலிகள் சேர்ந்தால் ஒரு மனிதனின் ஒரு நாள் உணவை காலி செய்யும் வல்லமை கொண்டவை. பாலூட்டி வகையை சேர்ந்த எலிகள் சேமித்த தானியத்தை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 முதல் 55 மில்லியன் டன்னுக்கு மேல் சேதப்படுத்துவதும் பயிர்களின் விளைச்சலில் சுமார் 25 சதம் பாதிப்பு ஏற்படுத்துவதும் நெல் அதிகம் விளையும் பகுதிகளில் நெல் தரிசு பயிர்களில் 90 சதம் சேதம் ஏற்படுத்தி வருவதும் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
ஒரு பெண் எலி ஒவ்வொரு முறையும் 8 முதல் 18 குட்டிகள் வரை போடுவதால் ஒரு ஜோடி எலிகள் ஒரு ஆண்டில் 500 ஆக பெருகும். இயற்கை வேளாண் உத்திகளில் பயிர் கழிவுகளை முறையாக மட்க வைப்பதும் தாவர நிலப் போர்வை மற்றும் ஊடுபயிர்கள் வளர்த்து களைகள் பெருகாது தடுத்தாலே போதும் எலிகள் தாக்குதலைக்கட்டுப்படுத்த முடியும்.
நெல், கரும்பு, கோதுமை, மக்காச்சோளம், பயிறுவகைகள், பருத்தி கடலை முதலியன எலிகளால் விரும்பி தாக்கப்படும். எனவே தொடர்ந்து உணவாகப் பயன்படும் பயிர்களை பயிரிடுவதைத் தவிர்ப்பதும், வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருப்பதும் நல்லது. ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 கிட்டிகள் (தஞ்சாவூர் கிட்டி- மூங்கிலால் செய்யப்பட்டவை) பயன்படுத்தலாம்.
வரப்பு சீராக்குதல், அவ்வப்போது தோண்டி வளைகளை அடைத்தல், கோடையில் வரப்பை வெட்டி அழிப்பதும் வலைக்குள் வைக்கோல் புகை மூட்டம் செய்து களிமண்ணால் பூசுவதும் எலி பொந்துகளை சுவர் அருகில் இருப்பின் கல், சிமெண்ட், வைத்து பூசுவதும் இரவுப் பறவையான ஆந்தைகள், கூகை, கோட்டான் முதலியன அமர்ந்து பிடித்து உண்ண ஏதுவாக காலிப்பானைகள் அல்லது சட்டிகளை தலைகீழாக ஒரு குச்சியில் கவிழ்த்து வைத்தால் பறவை இருக்கையாக வைத்து எலிகளைப் பிடிக்க உதவும் பூனை வளர்ப்பதும் பாம்புகளைக் கொல்லாமல் விடுதலும் எலியைக் கட்டுப்படுத்த உதவும். இயற்கை வேளாண்மை உத்தியாக பப்பாளிப்பழத்தை துண்டுகளாக்கி வயலில் ஆங்காங்கே வைத்தால் எலிகள் விரும்பி உண்ணும்.
இவை இனிப்பாக இருப்பதால் நன்கு உண்டு வயிற்றோட்டம் ஏற்பட்டே அழியும்.
எலிகள் இரவில் தான் அதிகம் ஆட்டம் போடும். கண்வலிக்கிழங்கு, வேம்பு, எருக்கு முதலிய தாவரங்கள் எலிக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். எலிகளைப் பிடித்து பெட்டிப்பொறி, முதுகு ஒடிக்கும் பொறி, விந்தைப் பொறி, ஒட்டும் அட்டைப் பொறி வைத்தும் அதில் உணவாக தேங்காய், கருவாடு அல்லது தக்காளிப்பழம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
அதிக வெளிச்சம் தரும் டார்ச்சு லைட் அடித்தால் அப்படியே நிற்கும். எலிகளை அடித்தே கொல்லலாம். தெர்மோகோல் துண்டுகளை சீனிப்பாகு அல்லது சர்க்கரைப்பாகில் தோய்த்து ஆங்காங்கே வைத்தாலும் எலிகள் அவற்றை உண்டு உணவு செரிக்காமல் சாகும். எலிகள் அதிகம் தங்கும் வளைகள் உள்ள இடத்தில் தனி ஆட்கள் வைத்து அவற்றைப் பிடித்தே அழிக்கலாம்.
தகவல்; தோட்டக்கலை உதவி இயக்குனர், திருப்பூர்.

Leave a Reply

You must be logged in to post a comment.