புராணக் கதைகளை ஊர்தோறும் கதாகாலட்சேபம் செய்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பெருமையை பட்டிதொட்டி தோறும் பரப்புரை செய்ததால் சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை ம.பொ.சிவஞானம் பெற்றார். நாடு விடுதலை பெற்றபின் ‘‘போர் முடியவில்லை; போர்முனை தான் மாறுகிறது’’ என முழங்கி, மொழிவழித் தமிழ் மாநிலம் அமையவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் பல போராட்டங்கள் நடத்தியவர் ம.பொ.சி.

மொழி வழி மாநிலப் போராட்டம்:
1947இல் தமிழக, கேரள, ஆந்திர, கன்னடப் பகுதிகள் அடங்கியதாக சென்னை ராஜ்யம் இருந்தது. அதனால் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் என மொழிவாரி மாநிலங்கள் அமைய வேண்டும் என கம்யூனிஸ்ட்டுகள் போராடி வந்தனர். அந்நேரத்தில் தென்மாநிலங்கள் இணைந்த தட்சிண பிரதேசம் அமைக்கலாம் என மத்திய காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. தட்சிண பிரதேசத்தை எதிர்த்து கூட்டணி அமைச்சர் ம.பொ.சி. முன்கை எடுத்தார். பி.டி.ராசன் தலைமையில் திமுக, தமிழரசுக் கழகம், சோசலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் சேர்ந்து தட்சிணப்பிரதேச திட்டத்தை எதிர்த்தனர்.

அதில் முக்கியப் போராளியாக திகழ்ந்தவர் ம.பொ.சி. 20.2.1956இல் நடந்த ‘ஹர்த்தால்’ போராட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ப.ஜீவானந்தம் ஆகியோர் காவல்துறையினரின் தடியடிக்கு ஆளாயினர். அப்போராட்டத்தால், தட்சிணப் பிரதேச திட்டம் முறியடிக்கப்பட்டு 1.11.1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைந்தன. மொழிவழி தமிழ்மாநிலம் அமையவிருந்த காலத்தில் சென்னை நகரை ஆந்திராவுடன் சேர்க்க சிலர் முயற்சி செய்தனர். அப்போது, ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்பேன்’ எனச் சூளுரைத்து, பல போராட்டங்கள் நடத்தியவர் ம.பொ.சி.

1947இல் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகள் கேரளாவுடன் இணைந்திருந்தன. ‘நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை’ என்று பாரதியாரால் பாடப்பெற்ற தமிழகத்தின் தெற்கு எல்லை கன்னியாகுமரி என்ற வரலாற்றுப் பூர்வ உரிமையை தமிழர் பெற நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் தளபதி நேசமணி தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்பை அமைத்து போராடினர். அப்போராட்டத்தில் தாணுலிங்க நாடார், குஞ்சன் நாடார், ப.ஜீவானந்தம், ஜி.எஸ். மணி, டி.மணி, காந்திராமன் போன்றோர் முன்னணியில் இருந்தனர். 1946லிலேயே ம.பொ.சி. நாஞ்சில் நாட்டு ஊர்களுக்குச் சென்று தமிழரின் உரிமைக்கு குரல்கொடுத்தார்.

தெற்கெல்லைப் போராட்டத்தை தீவிரப்படுத்த 1954இல் நாகர்கோவிலில் தமிழரசுக் கழக மாநாட்டை நடத்தினார். அதில் கவி.கா.மு.ஷெரீப், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், டி.வி.ராமசுப்பையர் போன்றோர் கலந்து கொண்டு நாஞ்சில் நாட்டை தமிழகத்துடன் சேர்க்க வலியுறுத்தினர். மொழிவழி மாநிலம் அமைக்க பசல் அலி கமிஷன் வந்தபோது, 11.5.1954இல் அக்குழுவினரை சந்தித்து குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் சேர்க்க ம.பொ.சி. கோரிக்கை மனு கொடுத்தார். 1.11.1956இல் குமரி மாவட்டம் தமிழ் மாநிலத்துடன் சேர்ந்தது.

வடவெல்லை உரிமைப் போராளி:
2.10.1953இல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது சித்தூர் மாவட்டம் தகராறுக்கிடமில்லாத தெலுங்கு மொழிப் பிரதேசம் என அறிவிக்கப்பட்டு, அதனை ஆந்திர மாநிலத்தோடு சேர்த்துவிட்டது மத்திய அரசு. உடனே வடவெல்லைப் பாதுகாப்புக்குழுவை கூட்டி வடவெல்லையை மீட்க கிளர்ச்சியில் ஈடுபட்டார் ம.பொ.சி. சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க தொடர்ந்து 15 நாட்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருத்தணி மறியலில் பம்பாய் எக்ஸ்பிரஸ் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது.

ம.பொ.சி. கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். எல்லைக்கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என 1956இல் செப்டம்பரில் சென்னை சட்டசபை முன்பு நடந்த மறியலில் ம.பொ.சி. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 28.9.1956இல் தமிழ்நாடு முழுவதும் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. வடவெல்லைப் போரில் சிறையில் அடைக்கப்பட்ட தமிழரசு கழகத் தோழர்கள் பழனி மாணிக்கம், திருவாலாங்காடு கோவிந்தசாமி ஆகிய இருவர் மரணமடைந்தனர். இப்போராட்டங்களின் விளைவாக எச்.வி.படாஸ்கர் தலைமையில் எல்லைக் கமிஷன் அமைக்கப்பட்டது. 26.12.1956இல் படாஸ்கரைச் சந்தித்து ம.பொ.சி. வடவெல்லை உரிமையை எழுத்துமூலம் எடுத்து வைத்தார்.

அதன்பின் தில்லி சென்று உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்தைச் சந்தித்து தமிழர் உரிமையை வலியுறுத்தினார். ம.பொ.சி.யின் போராட்டத்தால் சித்தூர் தமிழ்ப்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. 1.4.1960இல் திருத்தணி தமிழகத்தின் வடவெல்லையானது. தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்கவும் அவர் குரல் கொடுத்தார். தமிழர் உரிமைக்காக போராடிய போராளி ம.பொ.சி. தமிழின் உரிமைக்காகவும் பல இயக்கங்களை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் முழு அளவில் ஆட்சி மொழியாகவும் உயர்நீதிமன்ற மொழியாகவும், தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை பயிற்று மொழியாகவும் உரிமை பெற மக்கள் மன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் முழங்கினார் ம.பொ.சி.

இன்று மாபொசி பிறந்த நாள்.

Leave a Reply

You must be logged in to post a comment.