அன்புடையீர்!வணக்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் உண்மையோடும் உணர்ச்சியோடும் நிகழ்த்தும் தமிழர் உரிமை மாநாடு நிகழ்காலத்தின் நெடுந்தேவையாகும்.இந்தத் தமிழர் உரிமை மாநாடு தமிழர்களின் மொழி உரிமை – மண்ணுரிமை இரண்டையுமே முன்னெடுத்து வைக்கிறது.இந்தியக் கூட்டரசின் அடையாளமே மொழிவாரி மாகாணங்கள்தாம்.
ஒரு மொழி இனத்துக்கு முகமாகவும், நிலத்திற்கு எல்லையாகவும் திகழ்கிறது. மொழி என்பது வெறும் சப்தங்களின் சந்தை அல்ல; இனத்தின் – நாகரிகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாகும். அதன் மீது இன்னொரு மொழியைத் திணிப்பதென்பது இனத்தின் முகத்தை அழிப்பதற்கும் நிலத்தின் எல்லையைச் சுருக்குவதற்குமான சூழ்ச்சியாகும்.ஒரு கதம்பமாலையில் தொடுத்திருக்கும் பூக்கள் கூட அடுத்திருக்கும் பூவால் தங்கள் வாசனையை இழந்து விடுவதில்லை. ஒரு மலருக்கிருக்கும் சுயமரியாதை ஒரு மாநிலத்திற்கு இருக்காதா?
இந்தி மொழி தமிழகத்தின் மீது திணிக்கப்படுவது இது முதல் முறையன்று. 1938 மற்றும் 1965ஆம் ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமாகவே இந்திமொழி திணிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்துக் களம் கண்ட தலைவர்கள் சிறையிலே தங்கள் வாழ்நாளைத் தொலைத்திருக்கிறார்கள். பொறுத்துக்கொள்ளாத மறவர்கள் தங்களை எரித்துக்கொண்டு உயிரையே அழித்திருக்கிறார்கள். அந்த உணர்வு தமிழ்நாட்டில் இன்னும் பட்டுப்போகவில்லை என்பது தொட்டுப்பார்த்தால் தெரியும்.இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது திணிக்கப்பட்டதாக இருப்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றதல்ல. ஆடு கொள்ளப் பார்ப்பவர்கள் முதலில் ஆட்டின் குரல்வளையை நெரிப்பார்கள் என்பதுபோல நாடுகொள்ளப் பார்ப்பவர்கள் மொழியின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.
அதற்கு இந்த மாநாடு தெரிவிக்கும் அழுத்தமான கண்டனத்தில் என் குரலையும் பதிவு செய்கிறேன்.கீழடியின் ஆய்வுகளுக்கு இந்த மாநாடு குரல் கொடுப்பதையும் வைகைக் கரையின் மைந்தன் என்ற முறையில் வரவேற்கிறேன்.சிந்து சமவெளி நாகரிகம்தான் இந்திய நாகரிகம் என்று கருதப்பட்டுவரும் அறிவுலகத்தில் ஆதிச்சநல்லூரும் அதை அடுத்த கீழடியும் தென்னாட்டு நாகரிகத்திற்குப் புகழ்சேர்க்கும் நிலத்தடயங்கள் என்பது நிரூபணமாகி வருகிறது. மண்மூடிய நாகரிகத்தை மேலும் மண்போட்டு மூடிவிடாமல் கீழடியை விரிவாக ஆய்வு செய்வது மதம் கடந்த தமிழர் நாகரிகத்திற்கு மாண்பு சேர்க்கும் என்று இம்மாநாடு விரும்புகிறது.
இந்த இரண்டு கோரிக்கைகளும் செங்கோட்டையின் சுவர்களை முட்டித் திரும்பிவிடாமல் அவற்றைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்லவேண்டும் என்று இம்மாநாடு விரும்புகிறது.பெரியாரும் – அண்ணாவும் – சிங்காரவேலரும் – ஜீவாவும் – கலைஞரும் – பி.ராமமூர்த்தியும் காலங்காலமாகத் தமிழர் உரிமைகளுக்குக் கொடுத்து வந்த குரலை ஒட்டுமொத்த சமூகமே உயர்த்திப்பிடிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.இந்த மாநாட்டின் வெற்றி மாநிலத்தின் வெற்றி. இம்மாநாட்டில் குரல்கொடுக்கும் அனைவரையும், இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் நிகழ்காலத் தமிழ்நாடு மறுக்காது; எதிர்காலத் தமிழ்நாடு மறக்காது.வெல்க தமிழர் உரிமை மாநாடு என்று என் வாழ்த்துப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன்.
அன்புள்ள

Leave a Reply

You must be logged in to post a comment.