தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்த சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்புக்கும் விவாதத்திற்கும் உள்ளானது. இந்தக் கொலையைத் தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி பொறுத்தப்படும் என அறிவித்தனர். ஆனால், ஓராண்டுக்குப்பிறகும் நுங்கம்பாக்கம் உட்பட ரயில் நிலையங்களில் சிசிடிவி பொறுத்தப்படவில்லை.
ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுவாதி, கடந்த 2016 ஜூன் 24 ஆம் தேதி அதிகாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொடூரமான முறையில் நடைபெற்ற அந்தக் கொலைச் சம்பவம் மக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியது.. குற்றவாளி குறித்து துப்புத் துலங்கத் தாமதமானது பரபரப்பை மேலும் அதிகரித்தது. நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தைச் சுற்றிலும் அமைந்த பல்வேறு சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, கொலைச் சம்பவத்தை காவல்துறை விளக்கிய போதும், குற்றவாளியை அடையாளம் காண பாரம்பறிய முறைகளே கைகொடுத்ததாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம் குமார், சிறைச்சாலையிலேயே மின்வடக்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து  சுவாதி கொலைவழக்கு முடித்துவைக்கப்பட்டது.
டிசம்பர் 2016க்குள் சென்னையில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் சிசிடிவி பொறுத்தப்படும் என பயணியர் நலன்களுக்கான குழுவின் தலைவர் எச்.ராஜா அறிவித்தார். அது வெற்று அறிவிப்பாகவே தொடர்கிறது. சென்னையில் உள்ள 43 ரயில்நிலையங்களில் 7 நிலையங்களில் மட்டுமே சிசிடிவி வசதி உள்ளது.
இதுபற்றி நுங்கம்பாக்கம் ரயில் பயணிகளிடம் கேட்டபோது, “ஒருவருடம் ஓடிப்போனதே தெரியவில்லை. இன்னும் காமிரா அமைக்கப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி பேசுவார்கள் பின்னர் மறந்துவிடுவார்கள்” என்று தெரிவித்தார். மேலும், “இரவு நேரங்களில் போதுமான மின்வசதி இல்லை. மக்களின் அச்சத்தைப் போக்கவேண்டிய அரசு, தனது பணியைச் சரியாகச் செய்யவேண்டும்” என்றார்.
-ப்ரேம்

Leave a Reply

You must be logged in to post a comment.